குண்டு பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம்: துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல்


குண்டு பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம்: துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jan 2022 5:49 PM GMT (Updated: 5 Jan 2022 5:49 PM GMT)

குண்டு பாய்ந்து சிறுவன் இறந்த சம்பவத்தில் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை:
துப்பாக்கி சுடும் பயிற்சி தளம்
புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டியில் போலீசாரின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சம்பவத்தன்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், திருச்சி மத்திய மண்டல போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பயிற்சி தளத்தில் இருந்து வெளியேறிய குண்டு ஒன்று சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று நார்த்தாமலையில் வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தியின் (வயது 11) தலையில் பாய்ந்தது. 
இதில் குண்டு அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். சிறுவன் புகழேந்தியின் உடல் நேற்று முன்தினம் அவனது சொந்த ஊரான நார்த்தாமலை அருகே உள்ள கொத்தமங்கலப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. சிறுவன் சாவு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படு்த்தியது.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் சிறுவன் தலையில் பாய்ந்த குண்டை சுட்டது யார்? எந்த துப்பாக்கியில் அது பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து கண்டறிய பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் திருச்சி மத்திய மண்டல போலீசார் மீது கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இலுப்பூர் ஆர்.டி.ஓ. பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தி கலெக்டர் கவிதாராமுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். தடய அறிவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி, குண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் தான் முழு விவரம் தெரியவரும். குண்டுவின் ரகம் பற்றி அறிய சென்னையில் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிகள் பறிமுதல்
இதற்கிடையில் பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் திருச்சி மத்திய மண்டல போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகளை கீரனூர் போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, ‘‘துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது உண்மை தான். குண்டு ரகம் பற்றி ஆய்வு அறிக்கை வந்த பின்னர் தான் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும்’’ என்றனர். சிறுவன் தலையில் பாய்ந்த குண்டை சுட்டது யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

Next Story