பட்டாசு ஆலையில் வெடி விபத்து; உரிமையாளர் உள்பட 4 பேர் பலி


பட்டாசு ஆலையில் வெடி விபத்து; உரிமையாளர் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 5 Jan 2022 8:57 PM GMT (Updated: 2022-01-06T02:27:06+05:30)

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், அந்த ஆலையின் உரிமையாளர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிபட்டி ஊராட்சியை சேர்ந்த வல்லம்பட்டியில் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 42) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பென்சில் வெடி, தரைச்சக்கரம், புஸ்வாணம், தயாரிக்க மட்டுமே அனுமதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலையில் மருந்து செலுத்தும் அறையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கண்ணகுடும்பன்பட்டியை சேர்ந்த காசி (45) என்பவர் மருந்து செலுத்தும் பணியை செய்தபோது ஏற்பட்ட உராய்வினால் மருந்துகலவை வெடித்து சிதறி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு, தீப்பற்றியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதில் கட்டிடம் தரைமட்டமானது. இதனால் அறையின் வெளியில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த கொம்மங்கிபுரத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மனைவி சரஸ்வதி (40) என்பவர் மீது சுவர் இடிந்து விழுந்தது.

மேலும் மருந்து கலவை அறையிலிருந்த தள்ளுவண்டியும் வெடித்து சிதறியதில் அருகில் நின்றிருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி மேல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.

அந்த ஆலையில் வேலைபார்த்த மஞ்சளோடை பட்டியை சேர்ந்த முனியசாமி (45), கொம்மங்கிபுரத்தை சேர்ந்த பெருமாள் (40), சீனிவாசன் என்பவரின் மனைவி அய்யம்மாள் (47), தென்காசி மாவட்டம் கிழவிகுளம் காமாட்சிபுரத்தை சேர்ந்த செந்தில் (38) ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர்.

4 பேர் பலி

இதுகுறித்து தகவல் அறிந்த ஏழாயிரம்பண்ணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்தநிலையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் காயம் அடைந்த 7 பேரையும் போலீசாரின் வாகனங்களில் ஏற்றி சாத்தூர், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்தினால் ஏற்பட்ட தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் வெம்பக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

சாத்தூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட கண்ணகுடும்பன்பட்டியை சேர்ந்த காசி இறந்தார். படுகாயமடைந்த பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி சாத்தூரிலிருந்து மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

மேலும் காயமடைந்த அய்யம்மாளை சாத்தூரில் இருந்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவரும் பரிதாபமாக இறந்தார். கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செந்திலும் உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.

வழக்குப்பதிவு

நெல்லை ஆஸ்பத்திரியில் சரஸ்வதியும், பெருமாள், முனியசாமி (45) ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட்டாசு விபத்து குறித்து பனையடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில், பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமியின் தாயார் பூமாரி, சகோதரர்கள் நாகேந்திரன், ஆறுமுகம் ஆகியோர் மீது ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story