தி.மு.க. ஆட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி கூறும் குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யுரைகளின் கட்டுரை


தி.மு.க. ஆட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி கூறும் குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யுரைகளின் கட்டுரை
x
தினத்தந்தி 5 Jan 2022 10:55 PM GMT (Updated: 5 Jan 2022 10:55 PM GMT)

தி.மு.க. ஆட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யுரைகளின் கட்டுரை என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக பதிலளித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதன் பின்னர் அவைக்கு வெளியே நிருபர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது தி.மு.க. ஆட்சி மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் பத்திரிகையாளர்களுக்கு சட்டசபைக்கு வெளியே அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி வருமாறு:-

மிகக்குறுகிய காலத்தில் எவ்வளவு அற்புதமான திட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது என்பதெல்லாம் தொகுப்பாக எடுத்துச்சொல்லி சிறப்பான கவர்னர் உரை ஆற்றப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க. அதை ஏற்காமல் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.

தி.மு.க. ஆட்சியில் குட்கா போன்ற போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கூறினார். குட்கா என்ற போதைப்பொருள் இருப்பதையே தமிழ்நாட்டுக்கு பிரபலப்படுத்தி, சந்தி சிரித்த ஆட்சி அ.தி.மு.க.வின் கடந்த 5 ஆண்டு ஆட்சிதான். எனவே போதைப்பொருள் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை.

பாலியல் குற்றங்கள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது பெருகி இருப்பதாக கூறியிருக்கிறார். பொள்ளாச்சியில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பெண்கள் கதறி அழுத சம்பவம் எந்த ஆட்சியில் நடந்தது என்பதை அவர் மறந்துவிட்டாரா?

இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், துப்பாக்கி கலாசாரம் வந்துவிட்டதாகவும் கூறுகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சினை வந்தபோது அப்பாவி மக்கள் 13 பேரை குறிபார்த்து சுட்டுக் கொன்று, சட்டம் ஒழுங்கை முற்றிலுமாக சீர்குலைத்து, சந்தி சிரிக்கவைத்து, போலீசாரின் கவுரவத்தையே குலைத்த ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி.

மினி கிளினிக்

பொங்கலுக்கான பணம் கொடுக்கவில்லை என்றும் அவர் குறைகூறியுள்ளார். அவர்கள் தேர்தல் வரும் நிலையில் கடந்த ஆண்டுதான் பொங்கலுக்காக பணம் கொடுத்தார்கள்.

அம்மா மினி கிளினிக் என்று தொடங்கிவிட்டு அங்கு டாக்டர்கள், நர்சுகளை நியமிக்காமல் விட்டுவிட்டனர். அந்த கட்டிடங்களுக்கு வாடகையும் தரவில்லை. டாக்டர், நர்சு இல்லாத இடத்துக்கு கிளினிக் என்று பெயர் வைத்தனர். அரசியல் காரணங்களுக்காக அம்மா கிளினிக்கை நாங்கள் மூடினோம் என்றால், அம்மா உணவகங்கள் ஏன் செயல்படுகின்றன?

யாருக்கு கடன் தள்ளுபடி?

நகைக்கடன்களை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை என்று கூறுகிறார். கடந்த ஆட்சியில் திருவண்ணாமலையில் ஒருவர் 62 பெயர்களில் ஒன்றரைக் கோடி ரூபாய் நகைக்கடன் பெற்றுள்ளார். அப்படிப்பட்ட தவறுகளை சரிபார்த்து, முறைகேடாக கடன் பெற்றவர்களை கண்டறிந்து, அவர்களை நீக்கிவிட்டு, சரியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ்துறையை பயன்படுத்தி, எப்படியெல்லாம் அதிகார துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதை கோடநாடு விவகாரம் சுட்டிக்காட்டுகிறது. ‘நீட்’ தேர்வு கூடாது என்பதில் அ.தி.மு.க. போல நாங்கள் நாடகம் ஆடவில்லை. இதில் உளப்பூர்வமாக முதல்-அமைச்சர் உறுதியாக இருக்கிறார்.

எனவே எடப்பாடி பழனிசாமி சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தும் புறந்தள்ளப்பட வேண்டிய பொய்யுரைகளின் கட்டுரைகள்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story