சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் 67 மாணவர்களுக்கு கொரோனா


சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் 67 மாணவர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Jan 2022 11:05 PM GMT (Updated: 5 Jan 2022 11:05 PM GMT)

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் 67 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்கள் அனைவரும் விடுதியிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் அண்ணா பல்கழைக்கழக எம்.ஐ.டி. கல்லூரி வளாகம் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் தங்கி இருந்த 1,650 மாணவர்களில் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் விடுதியில் தங்கி இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 30-ந்தேதியிலிருந்து 1,617 மாணவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதல் கட்டமாக அதில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் 48 பேர் மாணவர்கள், 19 பேர் மாணவிகள் ஆவர்.

விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்

இவர்களில் 53 பேர் கல்லூரியில் உள்ள அந்தந்த விடுதி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிப்பு இல்லாதவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் விடுதியில் தங்கியுள்ள மற்ற மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்னும் பலருக்கு கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியது உள்ளது. அதில் மேலும் பலருக்கு தொற்று உறுதியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

போலீஸ் கமிஷனர்-கலெக்டர் ஆய்வு

எம்.ஐ.டி. கல்லூரி மாணவ-மாணவிகள் 67 பேர் ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் ஆய்வு செய்தனர்.

விடுதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எம்.ஐ.டி. கல்லூரி டீன் தியாகராஜனிடம் அறிவுறுத்தினர். அப்போது தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

முதல் கட்டமாக 67 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் எவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்வது, நோய்தொற்று இல்லாதவர்களை வீட்டுக்கு அனுப்புவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர், தாம்பரம் மாநகர போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக எம்.ஐ.டி. சார்பில் கல்லூரி டீன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். மாநகராட்சி மற்றும் போலீஸ் துறை சார்பிலும் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு மணி நேரமும் நோய் தொற்று பரவாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கண்டிப்பாக வீட்டில் இருந்தாலும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டோம் என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. பொதுவெளியில் முக கவசம் அணியாதவர்கள் மீது போலீஸ்துறை சார்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:-

500-க்கும் மேற்பட்டவர்களுக்கு

எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் 67 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து இன்று(நேற்று) மேலும் 310 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து உள்ளோம். இவர்களுடன் சேர்த்து 500-க்கும் மேற்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது.

கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தான் நடைபெற்று வருகிறது. இதனால் கல்லூரி விடுதியில் தங்கி உள்ள 1,650 மாணவர்களை தவிர 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இதுவரை எங்கும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் ஒருவர், இருவர் என மட்டுமே தொற்று உறுதியாகி வந்தது. ஆனால் எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில்தான் முதன்முதலாக ஒரே நேரத்தில் மொத்தமாக 67 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கிறிஸ்தவ கல்லூரி விடுதியில்

அதேபோல் தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரி விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுக்கும் கடந்த 3-ந்தேதி முதல் தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை நடத்தினர்.

அதன் முடிவு நேற்று மாலை வெளியானது. அதில் மொத்தம் 167 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 12 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்கள் கல்லூரி விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 197 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதன் முடிவு இன்று வெளியாகும் என தெரிகிறது.

அண்ணா பல்கலைக்கழக விடுதி

அதேபோல் சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் உள்ள சிலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

முதற்கட்டமாக 3 பேருக்கு தொற்று இருப்பதாகவும், மற்றவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டாலும், அதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகமோ, மாநகராட்சி சுகாதாரத்துறையோ அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அவர்களிடம் தகவல் கேட்டபோது கூட, சரியான பதில் இல்லை.

சென்னையில் மொத்தம் கல்லூரி மாணவர்கள் 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story