சொர்க்கவாசல் திறப்பு அன்று காலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை


சொர்க்கவாசல் திறப்பு அன்று காலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
x
தினத்தந்தி 6 Jan 2022 10:17 PM GMT (Updated: 6 Jan 2022 10:17 PM GMT)

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

இந்தநிலையில் சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. விழா முன்னேற்பாடுகளை செய்து வரும் உதவி- கமிஷனர் கவெனிதா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பகல் பத்து மற்றும் ராப்பத்து திருவிழாக்களின்போது அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். குறிப்பாக, சொர்க்கவாசல் திறப்புக்கு முந்தைய நாள் (12-ந்தேதி) இரவு 8 மணியிலிருந்து 13-ந்தேதி காலை 6 மணி வரை உபயதாரர்கள் உள்பட பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை. 13-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடு, அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அதற்கு பிறகு அன்று காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள்

வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது மாட வீதிகளில் நடக்கும் திருவீதி உலா நிகழ்ச்சிகள் ஆகம விதிகளின்படி கோவில் வளாகத்துக்குள் நடத்தப்படும். கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வது, உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்கலாம். அதேபோல், பக்தர்கள் தேங்காய், பூ, பழம் மற்றும் துளசி கொண்டு வரவேண்டாம். இயல்பு நிலை திரும்பும் வரை கோவில் உள்பகுதியில் நடைபெறும் சாமி புறப்பாடு, உற்சவங்களில் பக்தர்கள், உபயதாரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. பட்டாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சிகள் மற்றும் யூ-டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
நேரடியாக தரிசிக்க முடியாத திருவிழாக்கள்

திருவிழா நாட்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. குறிப்பாக, பகல் பத்து திருவிழாவில் 5-ம் திருவிழா (இன்று), 6 மற்றும் 7-ம் திருவிழா மற்றும் ராப்பத்து திருவிழாவில் வருகிற 14-ந்தேதி நடக்கும் 2-ம் திருநாள் தொடர்ந்து 3 மற்றும் 4-ம் திருவிழாக்கள் மற்றும் 9, 10 மற்றும் 11-ம் திருவிழாக்களும் இந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் வருகிறது. இந்த திருவிழாக்களை நேரடியாக பார்க்க முடியாமல், தொலைக்காட்சிகளில் நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது, மற்ற நாட்களில் காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் தரிசிக்கலாம் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story