‘நீட்’ தேர்வு எதிர்ப்பு விஷயத்தில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘நீட்’ தேர்வு எதிர்ப்பு விஷயத்தில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 6 Jan 2022 10:25 PM GMT (Updated: 2022-01-07T03:55:28+05:30)

‘நீட்’ தேர்வு எதிர்ப்பு விஷயத்தில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று நிறைவாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

நீட் தேர்வு விவகாரம்

எடப்பாடி பழனிசாமி:- நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அக்கட்சி உறுப்பினரே இப்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார். அதற்கான மத்திய அரசின் அரசாணையே என்னிடம் இருக்கிறது.

(இந்த நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை எழுந்து பேச முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை)

சபாநாயகர் அப்பாவு:- நீட் தேர்வு தொடர்பாக அவையில் நிறைய பேசிவிட்டோம். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை என்று இங்கே பேசியிருக்கிறார்கள். தற்போது, நீட் தேர்வு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டியிருக்கிறார். எனவே, அந்த கூட்டத்தில் உங் கள் கருத்தை தெரிவியுங்கள்.

நிச்சயம் ஒத்துழைப்பு கொடுப்போம்

எடப்பாடி பழனிசாமி:- கடந்த ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம்.

சபாநாயகர் அப்பாவு:- தமிழகத்திற்காக இப்போதும் ஒருமித்த கருத்தை கொடுங்கள்.

எடப்பாடி பழனிசாமி:- நிச்சயம் ஒத்துழைப்பு கொடுப்போம். கடந்த ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 435 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். தமிழகத்தில் 41 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில்தான் படிக்கின்றனர்.

அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

துரைமுருகன்:- நீட் தேர்வு பாதிப்பு குறித்து இருகட்சிகளும் உணர்ந்தாகிவிட்டது. அனைத்து கட்சி கூட்டத்தில் அதுகுறித்து முடிவெடுப்போம்.

அமைச்சர் க.பொன்முடி:- தமிழகத்தில் நுழைவுத்தேர்வையே நுழையவிடாமல் செய்தவர் தலைவர் கருணாநிதி. நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் வந்தாலும், அதை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுத்தவர் தலைவர் கருணாநிதி.

அவையில் சிரிப்பலை

(இந்த நேரத்தில் சபாநாயகர் மு.அப்பாவும் நீட் தேர்வு தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். அப்போது குறிக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், இங்கே ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேதான் விவாதம் என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய சபாநாயகர், என்னை ஏன் பிடித்துக் கொடுக்கிறீர்கள் என்றார். இதனால் மீண்டும் சிரிப்பலை எழுந்தது)

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story