27% இடஒதுக்கீடு செல்லும்; சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி: முதல்-அமைச்சர் வரவேற்பு


27% இடஒதுக்கீடு செல்லும்; சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி:  முதல்-அமைச்சர் வரவேற்பு
x
தினத்தந்தி 7 Jan 2022 9:41 AM GMT (Updated: 7 Jan 2022 9:41 AM GMT)

27% இடஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-அமைச்சர் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.



சென்னை,

மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத ஒதுக்கீடும் இந்த ஆண்டிலேயே வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

ஆனால் இது ஏராளமான மாணவர்களை பாதித்துள்ளதால், இந்த இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என மருத்துவ மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கான வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்ற வரையறையை மறுபரிசீலனை செய்ய தயார் என்றும், அதுவரை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறாது என்றும் மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா கடந்த நவம்பர் மாத விசாரணையின்போது தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதன்படி இந்த வழக்கின் விசாரணை நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. அப்போது ஆஜரான துஷார் மேத்தா, மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை தொடங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதில் தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘மருத்துவக் கல்வியில் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தகுதியை மதிப்பிடக்கூடாது, மனித விழுமியங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த ரிட் மனுக்கள் மீதான உத்தரவை 7-ந் தேதி (இன்று) பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.

அதன்படி இன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்த அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதே போல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அரசியல் சாசனத்தின்படி இது அனுமதிக்கத்தக்கது தான் என நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் மட்டும் கடைப்பிடித்து கலந்தாய்வை நடத்த நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். அதே நேரம் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வரையறை குறித்து மார்ச் 3-வது வாரத்தில் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு முதல்-அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரான மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓ.பி.சி.க்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி.  சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல் என தெரிவித்து உள்ளார்.

தி.மு.க.வும், சமூகநீதி மீது பற்று கொண்ட இயக்கங்களும் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியிது.  ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சியால் ஓ.பி.சி. மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி துடைத்தெறியப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது.  10% இடஒதுக்கீடு வழங்கும் அநீதியை முறியடிக்கும் போராட்டத்திலும் வெல்வோம்.  ஓ.பி.சி.க்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற தீர்ப்பு தி.மு.க. மற்றும் மக்களுக்கு கிடைத்த முக்கிய வெற்றி என அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story