அரிசி ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து


அரிசி ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 7 Jan 2022 7:05 PM GMT (Updated: 2022-01-08T00:35:17+05:30)

பாரிமுனையில் உள்ள அரிசி ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மாடியில் புகை மூட்டத்தில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பெரம்பூர்,

சென்னை பாரிமுனையில் உள்ள ஆண்டர்சன் தெருவில் அகர்வால் என்பவருக்கு சொந்தமான அரிசி ஏற்றுமதி நிறுவன குடோன் செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தின் 2-வது மாடியில் அதன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

நேற்று காலை அந்த அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அலுவலகம் முழுவதும் புகை மூட்டமானது. அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக எஸ்பிளனேடு மற்றும் பூக்கடை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அலுவலகத்தில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

3 பேர் மீட்பு

அப்போது அலுவலகத்தின் உள்ளே புகை மூட்டத்தில் சிக்கி வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறலுடன் தவித்து கொண்டிருந்த அலுவலக ஊழியர்கள் ராஜா உள்பட 3 பேரை தீயணைப்பு வீரர்கள் ராட்சத ஏணி உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

அதன்பிறகு ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அலுவலகத்தில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீ விபத்து குறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story