பொங்கல் பரிசு தொகுப்பில் பூச்சி எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு


பொங்கல் பரிசு தொகுப்பில் பூச்சி எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Jan 2022 9:22 PM GMT (Updated: 7 Jan 2022 9:22 PM GMT)

பொங்கல் பரிசு தொகுப்பில் பூச்சி உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. அதைத் தொடர்ந்து அவைக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

5 ஆண்டுகள் ஆயுட்காலம் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் நிலையை 3 ஆண்டுகளாக குறைப்பதற்கு சட்டமுன்வடிவை கொண்டு வந்திருப்பதை எதிர்க்கிறோம். இது ஒரு ஜனநாயக படுகொலை.

ஒரு கூட்டுறவு சங்கத்தில் தவறு ஏதாவது நடைபெற்றால் அங்கு மட்டும் முறையான விசாரணை மேற்கொண்டு, தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகியை நீக்கி அந்த கூட்டுறவு சங்கத்தை மட்டுமே கலைக்க முடியும். அனைத்து கூட்டுறவு சங்கங்களின் ஆயுள்காலத்தையும் பொத்தாம்பொதுவாக குறைக்க முடியாது.

ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரம்) தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் சொல்லியிருக்கிறார். சென்னையில் 11 வார்டுகளில் மட்டும்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி பணிகளை டுவிட்கோ நிறுவனத்தின் தலைவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 5-க்கு மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சேர்ந்த குழு தேர்வு செய்கிறது. அதன் பின்னர் நிதித்துறை செயலாளர் தலைமையிலான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு, அந்தப் பணி அவசியமா என்று முடிவு செய்கிறது. எனவே இதில் எந்தவித முறைகேட்டுக்கும் வாய்ப்பு இல்லை.

மினி கிளினிக்

விவசாயிகளின் நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக கொள்முதல் செய்யவில்லை. திறந்தவெளியில் அடுக்கி வைத்திருந்ததால் மழையால் நனைந்து நெல்மணிகள் முளைத்துவிட்டன. எனவே அந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.

அம்மா உணவகத்தை மூடினால் என்ன என்று சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் கேட்பது வேதனையளிக்கிறது. அந்தத் திட்டம் தொடரவேண்டும் என்று தெரிவித்துள்ளோம். இப்படி வேண்டுமென்றே திட்டமிட்டு அம்மா பெயரில் இருக்கின்ற திட்டங்களை எல்லாம் முடக்கப் பார்க்கிறார்கள்.

அரிசியில் பூச்சி

பொங்கல் பரிசில் 15 முதல் 18 பொருட்கள் வரைதான் கிடைக்கிறது. கொடுக்கிற பொருட்களும் தரமாக இல்லை. (அது சம்பந்தப்பட்ட வீடியோவை பத்திரிகையாளரிடம் காட்டினார்).

விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பை வாங்குவதாக கூறிவிட்டு, ஒவ்வொரு விவசாயியிடம் இருந்தும் ரூ.14 முதல் ரூ.20 வரைக்குத்தான் கரும்பு வாங்கினார்கள். ஆனால் ரூ.33 ரூபாய் என்று அறிவித்துள்ளார்கள். மீதி பணமெல்லாம் அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், எங்கு போக வேண்டுமோ அங்கும் போய்ச் சேர்ந்துவிட்டது. பொங்கல் பரிசு அரிசியில் பூச்சி உள்ளது. வெல்லம் இளகி ஒழுகுகிறது.

பொங்கல் பரிசை தேர்தலுக்காகத்தான் நாங்கள் கொடுத்ததாக தி.மு.க.வினர் கூறுகின்றனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பொங்கல் பரிசை கொடுத்து தொடங்கிவைத்தார். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக 2020-ம் ஆண்டில் ஆயிரம் ரூபாய், பொங்கல் தொகுப்பு அளித்தோம். 2021-ம் ஆண்டில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.2,500, பொங்கல் தொகுப்பு அளித்தோம்.

டாஸ்மாக்

அரசு அறிவித்த ஊரடங்கில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தமிழர்களுக்குத்தான் வேலை என்று தி.மு.க. சொல்லி வருகிறது. ஆனால் பொங்கல் தொகுப்பு பொருட்களை வடமாநில உற்பத்தியாளரிடம் இருந்து வாங்கியுள்ளார்கள். ‘கமிஷன், கரப்ஷன், கலெக்சன்’ என்பதற்காகத்தான் பக்கத்து மாநிலத்தில் கொள்முதல் செய்துள்ளார்கள்.

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று மஞ்சப்பை திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் பொங்கல் பொருட்கள் பிளாஸ்டிக்கில்தான் வந்துள்ளன.

டாஸ்மாக் டெண்டரை பொறுத்தவரை, ‘பார்’ எடுப்பதற்காக கரூர் மாவட்டத்திலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நுழைந்துள்ளார்கள். இதன் காரணமாகத்தான் பார் உரிமையாளர்கள் எல்லோரும் போராட்டம் நடத்தினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story