பொங்கல் பரிசு தொகுப்பை குறைபாடு இல்லாமல் வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


பொங்கல் பரிசு தொகுப்பை குறைபாடு இல்லாமல் வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Jan 2022 10:05 PM GMT (Updated: 7 Jan 2022 10:05 PM GMT)

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை குறைபாடு இல்லாமல் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்று இருக்கிறது. எல்லோருக்கும் 21 பொருட்கள் கிடைக்கவில்லை. பெரும்பாலான பைகளில் 5 முதல் 6 பொருட்கள் குறைவாக இருக்கிறது. சில பகுதிகளில் துணிப்பை கொடுப்பதில்லை என்று ஆங்காங்கே பொதுமக்கள் குறை கூறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

இது மட்டும் அல்லாமல், சில பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கிய வெல்லம் பாகுபோல் உருகி உள்ளதாக தகவல் வருகிறது.

கடன் வாங்கி...

இந்த பொங்கல் பரிசு தொகுப்பே இந்த மாதம் 14-ந் தேதி பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான். இந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணங்களால் தொகுப்பை பெற இயலாதவர்கள் இந்த மாதம் 31-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்பது எந்த நோக்கத்துக்காக இந்த பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.

ரொக்கமாக இருந்தால் கடன் வாங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு பின்னர் அதை திருப்பி செலுத்திவிடலாம். ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் வழங்கப்படுவதோ வெறும் தொகுப்பு. அதை வைத்து என்ன செய்ய முடியும்?.

சரி செய்ய வேண்டும்

எனவே இதில், முதல்-அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி, பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் அனைத்து பொருட்களும் நல்ல முறையில் கிடைக்கவும், ஏற்கனவே வாங்கிய தொகுப்பில் குறைபாடு இருந்தால் அதனை சரி செய்யவும் ஆவன செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story