ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு தொடங்கியது


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 7 Jan 2022 10:49 PM GMT (Updated: 7 Jan 2022 10:49 PM GMT)

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு மேலும் 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 26 வகையான சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. அந்த வகையில் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வையும், அதில் தேர்ச்சி பெற்றால் நேர்முகத் தேர்வையும் எதிர்கொள்ள முடியும்.

அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் பதவிகளில் அடங்கிய 712 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 10-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதிய நிலையில், 9 ஆயிரத்து 214 பேர் வெற்றி பெற்றனர். அதில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது.

கட்டுரை வடிவில்...

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் முதன்மைத் தேர்வு நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. மொத்தம் 24 நகரங்களில் மட்டுமே இந்த தேர்வு நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணி வரை நடைபெற்றது. இது கட்டுரை வடிவிலான தேர்வாக நடந்தது. தேர்வு எழுத வந்த மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று நடந்த இந்த தேர்வை ஆழமான புரிதலுடன் எழுதினால் மட்டுமே மதிப்பெண் அதிகம் கிடைக்கும் என்றும், கடந்த ஆண்டு தேர்வுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்வு சற்று கடினமாக இருந்தது என்றும் தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.

இன்று (சனிக்கிழமை) காலை பொதுப்பாடம்-1 தேர்வும், பிற்பகலில் பொதுப்பாடம்-2 தேர்வும் நடைபெற உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை பொதுப்பாடம்-3 தேர்வும், பிற்பகலில் பொதுப்பாடம்-4 தேர்வும் நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு, 15-ந்தேதி (சனிக்கிழமை) இந்திய மொழிகள் தேர்வும், பிற்பகலில் ஆங்கிலத் தேர்வும், 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை விருப்பத்தாள்-1 தேர்வும், பிற்பகல் விருப்பத்தாள்-2 தேர்வும் நடக்க உள்ளது. 9-ந்தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை காண்பித்து, தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சைதை துரைசாமி வாழ்த்து

முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் சார்பில் மதிய உணவு வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் 8, 9, 15, 16 ஆகிய 4 நாட்களுக்கு சென்னையில் நடைபெறும் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட உள்ளது.

அதேபோல் தேர்வு எழுதி வரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சில அறிவுரைகளையும் சைதை துரைசாமி வழங்கியுள்ளார். அதில், ‘உங்களில் யார் வெற்றி பெற்றாலும், என்னுடைய மகன், மகள் வெற்றி பெற்றது போன்ற மகிழ்ச்சியைதான் நான் அடைவேன். அதை உங்கள் மூலம் பெற வேண்டும். முதன்மைத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, நேர்முகத் தேர்வுக்கு டெல்லி சென்று வெற்றி பெற உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மனிதநேயம் செய்யும். எந்த விதமான மனசஞ்சலமும் இல்லாமல் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். நீங்கள் உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துகிறேன். உன்னால் முடியும் தம்பி' என்று கூறியுள்ளார்.

Next Story