கொரோனா 3-வது அலை பரவல்: தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ கடைகளை மூட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


கொரோனா 3-வது அலை பரவல்: தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ கடைகளை மூட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Jan 2022 6:55 PM GMT (Updated: 9 Jan 2022 6:55 PM GMT)

கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதால் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கொரோனா தொற்று 3-வது அலை வேகமாக பரவ தொடங்கியதையடுத்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு, தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தல், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை என பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ‘டாஸ்மாக்’ கடைகள் பற்றி வாய் திறக்கவில்லை.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 580 என்றிருந்த நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது அதை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தன் வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். நேற்று (நேற்று முன்தினம்) 10 ஆயிரத்து 978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வேகமாக பரவிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசுக்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாதிப்பு இரட்டிப்பாகும்

ஒரு பக்கம் பள்ளி-கல்லூரிகளை மூடவும், வழிபாட்டுத்தலங்களை வாரத்தில் 3 நாட்கள் மூடவும் உத்தரவிட்டுவிட்டு, மறுபக்கம் மதுக்கடைகளை திறந்துவைப்பது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவாது. மாறாக, தொற்று பாதிப்பை அதிகரிக்க வழிவகுக்கும். கடந்த 5 நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் பார்த்தால், தற்போதுள்ள 8 சதவீத பாதிப்பு என்பது ஒரு வாரத்தில் இரட்டிப்பாகும் சூழ்நிலைக்கு வாய்ப்புள்ளது.

பிப்ரவரி மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொடும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். எனவே இதன் உச்சத்தை ஓரளவுக்கு தணிக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிடுவதுதான் உத்தமமாக இருக்கும்.

மதுக்கடைகளை மூட வேண்டும்

எனவே மக்கள் நலனை கருத்தில்கொண்டு, கொரோனா 3-வது அலையை ஓரளவுக்காவது தடுக்கும்வகையில், கொரோனா பரவலின் தாக்கம் 5 சதவீதத்துக்கு கீழ் செல்லும் வரையிலாவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story