ஜல்லிக்கட்டு போட்டி; வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு, இரண்டு வேளை உணவு: அமைச்சர் தகவல்


ஜல்லிக்கட்டு போட்டி; வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு, இரண்டு வேளை உணவு:  அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2022 12:46 PM GMT (Updated: 10 Jan 2022 12:48 PM GMT)

ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் மாநகராட்சி ஆணையர் தலைமையிலும், பாலமேடு, அலங்காநல்லூரில் ஆட்சியர் தலைமையிலும் நடைபெறும்.




மதுரை,


மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது பற்றி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், தமிழக வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், ஆட்சியர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், ஓர் இடத்தில் கலந்து கொண்டால் மற்றோர் இடத்தில் பங்கேற்க அனுமதி இல்லை.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெறும்.  பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.

ஒவ்வொரு போட்டியிலும் தலா 700 மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.  காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.  இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம்.  மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு காலை, மதியம் இரண்டு வேளை உணவு வழங்கப்படும்.  தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த போட்டிகளில், சுற்றுலா பயணிகளோ, வெளிமாவட்டங்கள் அல்லது வெளிமாநிலத்தில் இருந்தோ, போட்டி நடக்கும் கிராமத்திற்கு அருகே இருக்கும் கிராமத்தில் இருந்தோ பங்கேற்க அனுமதி கிடையாது.

ஜல்லிக்கட்டு போட்டியில், நாட்டு காளைகள் பங்கேற்கலாம்.  தகுதியுள்ள காளைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.  அடையாள அட்டை அவசியம்.  நேரடியாக டோக்கன் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த முறை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாது என அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story