விருதுநகர், ராமநாதபுரம் புதிய மருத்துவக்கல்லூரிகள் நாளை திறப்பு - மோடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்


விருதுநகர், ராமநாதபுரம் புதிய மருத்துவக்கல்லூரிகள் நாளை திறப்பு - மோடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்
x
தினத்தந்தி 10 Jan 2022 7:37 PM GMT (Updated: 10 Jan 2022 7:37 PM GMT)

விருதுநகர், ராமநாதபுரம் உள்பட 11 மருத்துவக்கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கின்றனர்.

விருதுநகர்,

விருதுநகர், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தில் 11 இடங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் ஆகி உள்ளன. இதில் விருதுநகர் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிக்காக மாநில அரசு ரூ.250 கோடியும், மத்திய அரசு ரூ.130 கோடியும் ஆக மொத்தம் ரூ.380 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் விருதுநகர் மருத்துவ கல்லூரி கட்டிடம், அங்குள்ள கலெக்டர் அலுவலகம் அருகே 22 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டி முடிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. தமிழகத்திலேயே தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள ஒரே மருத்துவக்கல்லூரி விருதுநகர் மருத்துவக்கல்லூரி ஆகும்.

இந்த மருத்துவக்கல்லூரியில் 22 துறைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 8 துறைகள் மருத்துவம் சாரா துறைகள் ஆகும். 14 துறைகள் மருத்துவம் சார்ந்த துறைகள் ஆகும்.

இருதய சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, மூட்டு எலும்பு மாற்று சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு நவீன சிகிச்சை பிரிவுகள் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே 96 அறைகள் கொண்ட விடுதிகள் கட்டப்பட்டு உள்ளது. மேலும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் தங்குவதற்காக 66 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் 850 பேர் அமர வாய்ப்புள்ளது. மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் 800-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நவீன மருத்துவ சிகிச்சைக்கும் வசதி உள்ளது.

இந்த மருத்துவக்கல்லூரி திறப்பு விழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆதலால் நாளை காணொலி காட்சி மூலம் விழாவை மோடி மற்றும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்கள் என விருதுநகரில், உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதே போல் ராமநாதபுரம் உள்பட மற்ற ஊர்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரிகளையும் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story