மழை காலத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்க நவீன கருவிகள் அமைச்சர் திறந்து வைத்தனர்


மழை காலத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்க நவீன கருவிகள் அமைச்சர் திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 10 Jan 2022 9:24 PM GMT (Updated: 10 Jan 2022 9:24 PM GMT)

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மழை காலத்தில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கான நவீன கருவிகள் பயன்பாட்டை அமைச்சர் செந்தில்பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை,

மழை காலங்களில் மின் விபத்தை தடுக்கவும், தடையற்ற மின்சாரத்தை வழங்கவும் மின் இணைப்பு பெட்டிகளை உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. அதே போன்று வளைய சுற்றுத்தர கருவி (ஆர்.எம்.யு.) நிறுவும் பணியும் தொடங்கி உள்ளது. இந்த கருவி இரு மின்வழி பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஏதேனும் ஒரு மின்பாதையில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு மின்வழி பாதை மூலம் மின்சாரத்தை வழங்க கூடியது.

மேலும் இந்த கருவியை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்தும் இயக்கலாம். இதன் மூலம் மின்சாரம் எடுத்து செல்லும் வயர்களில் பழுது ஏற்பட்டால் கூட உடனடியாக சரி செய்யும் வசதி கொண்டது.

தொடங்கி வைத்தனர்

இந்தநிலையில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட வி.ஆர்.பிள்ளை தெரு, ஆலங்காத்தான் தெரு, தேவராஜ் முதலி தெரு, ஜான் ஜானி கான் 2 தெருக்கள், தலையாரி தெரு, தெற்கு கூவம் ரோடு, கஜா தெரு, எல்லப்பன் தெரு, சி.பி.எம். தெரு, காக்ஸ் கொயர், சுவாமி நாயக்கன் தெரு, லாக் நகர் 2 தெருக்கள், பார்த்தசாரதி தெரு ஆகிய பகுதிகளில் 15 புதிய வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் நிறுவப்பட்டது.

இந்த கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் விழா, வி.ஆர். பிள்ளை தெருவில் நேற்று நடைபெற்றது. விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் முன்னிலையில் இந்த கருவிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

108 கருவிகளை...

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர்-மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் மா.சிவலிங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மொத்தம் 108 இடங்களில் இந்த கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரையில் 27 கருவிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story