முதல்-அமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிப்பு


முதல்-அமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2022 10:11 PM GMT (Updated: 10 Jan 2022 10:11 PM GMT)

அதிக சிகிச்சையுடன் முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தமிழக அரசு இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை,

உயிர்காக்கும் உயர் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெறுவதற்காக முதல்-அமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.7.2009 அன்று தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவத் திட்டம், பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. தற்போது செயல்படுத்தப்படும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இம்மாதம் முடிவு பெறுகிறது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2021-22-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், ‘5 ஆண்டுகளுக்கு மேலும் அதிக சிகிச்சை முறைகளுடன், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய திட்ட பயனாளிகள் அதிகபட்சம் ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் செயல்படுத்தப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு எந்தவித உச்சவரம்பின்றி முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்த்துக்கொள்ளப்படுவர்’ என்று அறிவிக்கப்பட்டது.

5 ஆண்டுகள் நீட்டிப்பு

மேலும், ஏழை எளிய மக்கள் கூடுதல் பயன்பெறும் வகையில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு 16.12.2021 அன்று அரசாணை வெளியிட்டது. அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 10-ந் தேதி (நேற்று) சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 11.1.2022 முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு (பொதுத்துறை நிறுவனம்) அதற்கான ஆணையை வழங்கினார்.

அதோடு, முதல்-அமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ.1,248.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள் மற்றும் 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1,090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட 714 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 886 தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 1,600 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். அத்துடன் 86 கூடுதல் சிகிச்சை முறைகள் தற்போது செயல்படுத்தப்படும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு வசதி பெற முடியும்.

செய்தியாளர், குடும்பத்தினர்

செய்தித் துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களை, ஆண்டு வருமான உச்சவரம்பின்றி முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைக்கவும், இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் பட்டியல்களைப் பெற்று முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையினால் 2020-2021-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர் அடையாள அட்டை உடைய 1,414 செய்தியாளர்களின் குடும்பங்கள் முதல் கட்டமாக இந்த அரசாணையின்படி இத்திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி அங்கீகரிக்கப்பட்ட 10 செய்தியாளர்கள், பருவ இதழ் செய்தியாளர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அடையாள அட்டைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இஸ்பாகான் அமைப்பின் மாநாடு

இஸ்பாகான் அமைப்பின் 14-வது மாநாடு சென்னை பழவந்தாங்கலில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு அமைப்பின் தலைவர் கே.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாநாட்டினை தொடங்கிவைத்தார்.

மாநாடு தொடக்க நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துறையின் செயலாளர் அருண்ராய், மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் புத்தொழில் ஆரம்ப நிலை நிதி குழுத் தலைவர் எச்.கே.மிட்டல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநாட்டை தொடங்கிவைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, தமிழ்நாடு என்பது கல்வியிலும், பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும், பண்பாட்டிலும், மேன்மை அடைந்த ஒரு மாநிலம். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இளைஞர்களின் அறிவு சக்தி ஆகும். தமிழ்நாட்டில் அறிவு சக்தி நிரம்பிய ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு 2030-க்குள், அதன் மாநில மொத்த உள் உற்பத்தி மதிப்பை ஒரு டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று நான் உறுதி ஏற்றிருக்கிறேன். இது சாத்தியமாக வேண்டும் என்றால், ஆயிரக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் உருவாக வேண்டும். அவை உள்ளூர் சந்தையிலும் உலகச் சந்தையிலும் வெற்றிபெற வேண்டும். பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தாக வேண்டும். இதுதான் நாம் காண வேண்டிய வளர்ச்சி. என்று கூறினார்.

Next Story