ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2022 11:52 PM GMT (Updated: 2022-01-11T05:22:23+05:30)

ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் 10-ந் தேதி வரை (நேற்று) பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மக்கள் பெருமளவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, காளைகள் மற்றும் மாடுபிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பார்வையாளர்களாக பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்.

திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஜல்லிக்கட்டு போட்டியையும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த ஆண்டிலும், தற்போது கொரோனா தொற்று காரணமாக நிபந்தனைகளுடன் அனுமதித்து அரசு ஆணையிடுகிறது.

2 டோஸ் சான்று

ஜல்லிக்கட்டில் காளைகளின் உரிமையாளர்கள், அவர்களைச் சார்ந்தவர்களுமாக 5, 6 பேர் வருவது வழக்கம். இதை கட்டுப்படுத்தி, காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்றாக பழகியுள்ள ஒரு உதவியாளர் அனுமதிக்கப்படுவார். ஆனால் அவர்கள், 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடக்கும் வளாகதில் நுழைய முடியாது.

300 வீரர்கள் மட்டும்

காளைகளை பதிவு செய்யும்போது உரிமையாளர் மற்றும் உதவியாளரும் பதிவு செய்ய வேண்டும். காளைகளின் பதிவு, நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்று நடத்த அனுமதிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் பங்கு பெறும் வீரர்களும் நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன்பதாக பதிவு செய்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை பெற வேண்டும். அது இல்லாவிட்டால் வளாகத்திற்கு செல்ல அனுமதி கிடைக்காது.

வீரர்களும் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு

கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளை பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டும். திறந்த வெளி அரங்கத்தில் அதன் அளவிற்கு ஏற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மிகாமல், இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர் அனுமதிக்கப்படுவர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

வெளியூர் மக்கள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த அரசின் முன் அனுமதி பெற்று, பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசின் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story