குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள் வந்த அரைமணி நேரத்தில் நேரடி விசாரணை


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள் வந்த அரைமணி நேரத்தில் நேரடி விசாரணை
x
தினத்தந்தி 11 Jan 2022 6:46 PM GMT (Updated: 2022-01-12T00:16:08+05:30)

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள் மீது, புகார்கள் வந்த அரைமணி நேரத்தில், சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வழிகாட்டு அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

அரைமணி நேரத்தில்...

1. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் வந்த அரை மணி நேரத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டும். புகார்கள் தொடர்பாக உடனடியாக சி.எஸ்.ஆர். ரசீதுகள் வழங்க வேண்டும்.

2. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. குடும்ப உறுப்பினர்களால் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு நடந்திருந்தால், அதுபற்றி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை உரிய பாதுகாப்பாக வைக்க வேண்டும். தொல்லை கொடுத்த குடும்ப உறுப்பினரிடமிருந்து, குழந்தையை மீட்க வேண்டும்.

விரும்பிய இடத்தில் விசாரணை

4. பாதிக்கப்பட்ட குழந்தை விரும்பும் இடத்திற்கு சென்று, விசாரணை அதிகாரி விசாரிக்க வேண்டும். விசாரணை நடத்த செல்லும்போது, போலீஸ் சீருடையில் செல்லக்கூடாது. சாதாரண உடையில் சென்றுதான் விசாரிக்க வேண்டும்.

5. முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்த பிறகு அந்த அறிக்கையின் நகல் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் வழங்கப்பட வேண்டும். குற்றம் பற்றிய தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.

6. போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்போது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அந்த குற்றப்பத்திரிகை நகலை காட்டி, அவரது ஒப்புதலை பெற வேண்டும்.

7. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story