பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் முறைகேடு: விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் முறைகேடு: விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jan 2022 6:54 PM GMT (Updated: 11 Jan 2022 6:54 PM GMT)

‘பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’, என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காண்பித்துக் கொள்ளும் தி.மு.க, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களை வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அந்தப் பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கத்துடன் கூடிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டுக்கான பொங்கல் திருநாளுக்கு துணிப்பையுடன் கூடிய வெறும் 21 சமையல் பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் தமிழ்நாட்டு மக்கள் உற்சாகமிழந்து காணப்படுகிறார்கள். இந்த பொருட்கள் வழங்குவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதை நான் சுட்டிக்காட்டினேன். ஆனால் சிலர் தவறான கருத்துகளை பரப்புவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

படுதோல்வி அடைந்துள்ளது

தவறான கருத்துகளை யாரும் பரப்பியதாகத் தெரியவில்லை. தரமற்ற பொருட்கள், எடை குறைவு, பொருட்களின் எண்ணிக்கை குறைவு, துணிப்பை வழங்காமை என பல்வேறு உண்மை நிகழ்வுகளைத்தான் மக்கள் எடுத்துக் கூறினார்கள். அதற்கான வீடியோ ஆதாரமும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பதுதான் யதார்த்தம். இதைவிட ரொக்கமாக ரூ.1,000 கொடுக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று மக்கள் கூற ஆரம்பித்துவிட்டார்கள். இந்தத் திட்டத்தினால் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. பயனாளிகள் யார்? என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். மொத்தத்தில், இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்பதுதான் உண்மை.

விரிவான விசாரணை தேவை

இதையெல்லாம் நான் கட்டிக்காட்டுவதற்குக் காரணம், மக்கள்படும் அவதி, மக்களிடையே காணப்படும் குறைகள், மக்களிடையே நிலவும் அதிருப்தி ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு, முதல்-அமைச்சர் கவனத்துக்கு எடுத்துக் கொண்டு வரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. மக்களின் புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்-அமைச்சருக்கு உண்டு.

எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, இந்தத் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலத்தில் நிகழாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story