சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளை மண்டல வாரியாக பிரிக்கும் முறை ரத்து


சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளை மண்டல வாரியாக பிரிக்கும் முறை ரத்து
x
தினத்தந்தி 11 Jan 2022 10:21 PM GMT (Updated: 11 Jan 2022 10:21 PM GMT)

சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளை மண்டல வாரியாக ஒதுக்கீடு செய்யும் முறையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஆர்.பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும், பெண்களுக்கும் 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

மீதமுள்ள வார்டுகளில் பெண்களுக்கு 89 வார்டுகளும், ஆண்களுக்கு 79 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், கூடுதலாக 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

சமமாக வேண்டும்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், "மாநகராட்சி வார்டுகளில் எஸ்.சி., எஸ்.டி. ஒதுக்கீடு போக மீதமுள்ள வார்டுகளை சரிசமமாக பிரிக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து, ஒற்றைப்படையில் உபரியாக வரும் வார்டை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளனர்.

இதனால், ஆண்களைவிட பெண்களுக்கு அதிக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனுதாரரை பொருத்தவரை பெண்களுக்கு வார்டுகளை ஒதுக்குவதை எதிர்க்கவில்லை. ஆனால், கூடுதலாக ஒதுக்குவதை எதிர்க்கிறார். எனவே, மண்டல வாரியாக வார்டுகளை பிரிக்காமல், ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும்.

பிரதிநிதித்துவம்

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், "சென்னையை பொறுத்தவரை மத்திய சென்னையில் தான் அதிக பெண்கள் உள்ளனர். புறநகர் பகுதியில் பெண்களின் எண்ணிக்கை குறைவு. அதனால், பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மண்டல வாரியாக வார்டுகள் ஒதுக்கப்பட்டன" என்று வாதிட்டார்.

இவரது வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ரத்து

மண்டல வாரிய வார்டுகளை ஒதுக்குவதால், பெண்களுக்கு 53 சதவீதம் வார்டுகள் ஒதுக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்படுகிறது.

அரசியல் அமைப்பு சட்டத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதை மீறக்கூடாது. எனவே, வார்டுகளை மண்டல வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story