நீட் தேர்விலிருந்து விலக்கு - மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை மனு


நீட் தேர்விலிருந்து விலக்கு - மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 12 Jan 2022 12:12 PM GMT (Updated: 2022-01-12T17:42:45+05:30)

மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

சென்னை, 

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் வாயிலாக இன்று மாலை திறந்து வைத்தார். மேலும், சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்-அமைசர் மு.க.ஸ்டாலின், “மருத்துவத் துறையில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மாணவர் சேர்க்கை தொடர்பான இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் நீட் விலக்கு உள்ளிட்ட அடங்கிய மனுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். இதன்படி நீட் விலக்கு, மதுரை எய்ம்ஸ், 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்தார். 

இதனிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகளை பார்வையிட்ட மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, கொரோனா தொற்றுக்கு எதிராக உள்ளூர் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சிறப்புக்குரியது என்று பாராட்டு தெரிவித்தார். 

Next Story