பொங்கல் பண்டிகை: சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்...!


பொங்கல் பண்டிகை:  சொந்த ஊர்களை நோக்கி  படையெடுக்கும் மக்கள்...!
x
தினத்தந்தி 12 Jan 2022 2:57 PM GMT (Updated: 12 Jan 2022 2:57 PM GMT)

5 நாள் பொங்கல் விடுமுறை எதிரொலியாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கி உள்ளனர்.

சென்னை, 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 11-ந்தேதி முதல் வழக்கமான பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

 ‘ 12-ந்தேதி (இன்று) மாலை 4 மணி நிலவரப்படி கடந்த 2 நாட்களில் வழக்கமான பஸ்கள், சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 529 பஸ்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் மூலம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 865 பயணிகள் புறப்பட்டு சென்றுள்ளனர். இதில் 81 ஆயிரத்து 445 பேர் முன்பதிவு பயணிகள் ஆவார்கள்.’ என்றார்.

 கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து பஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகையை கொண்டாடப்பட உள்ளநிலையில், சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 1,920 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட இருக்கிறது.

இந்தநிலையில், 5 நாள் பொங்கல் விடுமுறை எதிரொலியாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களை நோக்கி  மக்கள் படையெடுக்க துவங்கி உள்ளனர். 

மறைமலைநகர் முதல் செங்கல்பட்டு வரை  போக்குவரத்து நெரிசலால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

Next Story