போக்சோ வழக்கை முடித்து வைப்பதாக கூறி ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை ரூ 8 லட்சம் மோசடி கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு


போக்சோ வழக்கை முடித்து வைப்பதாக கூறி  ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை ரூ 8 லட்சம் மோசடி  கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 12 Jan 2022 3:29 PM GMT (Updated: 12 Jan 2022 3:29 PM GMT)

போக்சோ வழக்கை முடித்து வைப்பதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி
போக்சோ வழக்கை முடித்து வைப்பதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாலியல் வழக்கு

வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஆன்ட்ரோ (வயது 55). இவர் மீது கடந்த 2017-ம் ஆண்டு, முத்தியால்பேட்டை போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் வழக்கு விசாரணைக்காக அவரது மனைவி வக்கீலை தேடி வந்தார். 
அப்போது புதுச்சேரி செயின்ட் தெரேசா வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை பாலா என்கிற பாலசுந்தரியின் (வயது 67) உதவியை நாடினார்.
அப்போது அவர் தனது சகோதரர் சி.பி.ஐ.யில் பணியாற்றி வருவதாகவும், தனக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பல சீனியர் வக்கீல்களை தெரியும் என்றும் கூறியுள்ளார். 
மேலும் ஜான் ஆன்ட்ரோவின் வழக்கை முடித்து வைக்க ரூ.10 லட்சம் வக்கீலுக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய ஜான் ஆன்ட்ரோவின் மனைவி கடந்த 2017-ம் ஆண்டு பல தவணை ரூ.10 லட்சத்தை பாலசுந்தரியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ரூ.8 லட்சம் காசோலை

பணத்தை பெற்றுக்கொண்ட பிறகும் பாலசுந்தரி அந்த வழக்கை முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜான் ஆன்ட்ரோ, அவரது மனைவி மற்றொரு வக்கீல் மூலம் அந்த வழக்கை ரத்து செய்துள்ளார். 
இதற்கிடையே பணம் வாங்கி கொண்டு வழக்கை முடிக்காததால் ஆத்திரமடைந்த ஜான் ஆன்ட்ரோ, பாலசுந்தரியை சந்தித்து கேட்டபோது பணத்தை கொடுக்காமல் இழுத்துடித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு இது தொடர்பாக பெரியக்கடை போலீசில் பேச்சுவார்த்தை நடந்தது. 
அப்போது, ரூ.8 லட்சம் தருவதாக சமரசம் செய்து, அதற்கான காசோலையை பாலசுந்தரி வழங்கியுள்ளார். அதை ஜான் ஆன்ட்ரோ ரெட்டியார்பாளையம் வங்கி கிளையில் செலுத்தினார். இதற்கிடையே பாலசுந்தரி தனது காசோலைக்கு பணம் வழங்க கூடாது என வங்கிக்கு தெரிவித்து இருந்தது தெரியவந்தது. 

கோர்ட்டு உத்தரவு

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜான் ஆன்ட்ரோ புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டது.
அதன்பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார், பாலசுந்தரி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story