கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தவேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தவேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jan 2022 7:03 PM GMT (Updated: 12 Jan 2022 7:03 PM GMT)

கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 3 நாட்களுக்கு முன்பு தி.மு.க. அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரும்புக்கு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 900 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது கரும்பு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விவசாயிகள் டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என்று கூறி வரும் நிலையில், 2020-21-ம் ஆண்டு அரவை பருவத்துக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையான கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 707 ரூபாய் 50 காசு என்பதுடன் உற்பத்தி ஊக்கத்தொகையாக 42 ரூபாய் 50 காசு மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.150 என மொத்தம் 192 ரூபாய் 50 காசு தமிழக அரசால் வழங்கப்படும் என்றும், இதன்மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 900 கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சியின் கடமை

மு.க.ஸ்டாலின் 5 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 500 அளிக்கப்படவேண்டும் என்று குரல் கொடுத்தவர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று 8 மாதங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை மூலம் வாக்குறுதி அளித்தவர். இப்போது ஆட்சிக்கு வந்தப்பிறகு ரூ.2 ஆயிரத்து 900 என்று அறிவிப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் ஆகும். ‘சொல்வது ஒன்று செய்வது ஒன்று' என்ற அளவில் தி.மு.க.வின் செயல்பாடு இருக்கிறது. இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சொன்னதையும், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபிறகு செய்வதையும் ஒப்பிட்டு, அதனை அரசுக்கு சுட்டிக்காட்டி நினைவுப்படுத்துவதும், அதனை நிறைவேற்ற வலியுறுத்துவதும் எதிர்க்கட்சியின் கடமை என்ற அடிப்படையில் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு இதை கொண்டு வருகிறேன்.

ரூ.4 ஆயிரம்

முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியான கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்பதையாவது நிறைவேற்ற வழிவகை செய்யவேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சார்பாகவும், அ.தி.மு.க. சார்பாகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story