மாநில செய்திகள்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 4,544 காளைகள், 2 ஆயிரம் வீரர்கள் முன்பதிவு + "||" + 4,544 bulls, 2,000 players booked for Avanyapuram, Palamedu, Alankanallur Jallikattu

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 4,544 காளைகள், 2 ஆயிரம் வீரர்கள் முன்பதிவு

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 4,544 காளைகள், 2 ஆயிரம் வீரர்கள் முன்பதிவு
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என 3 ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு மொத்தம் 4,544 காளைகள், 2 ஆயிரம் வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
மதுரை,

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை தினத்தில் மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.


வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அதற்கு அடுத்த நாள் 17-ந்தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாவை காண ஒவ்வொரு போட்டிக்கும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்பதிவு முடிந்தது

வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. 3 ஊர்களில் நடைபெறும் போட்டிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2001 வீரர்கள் முன்பதிவு செய்தனர்.

இதேபோல் 4,544 காளைகளுக்கும் அவற்றின் உரிமையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு இ-சேவை மையங்கள் மூலம் விறுவிறுப்பாக நடந்தது. சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலனை செய்து தகுதியானவர்கள் போட்டிக்கு அழைக்கப்படுவர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

இந்தநிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை தினத்தில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது.

அதற்காக, அவனியாபுரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் வாடிவாசல் அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடந்தன.

இதுபோல் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் தலா 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.