பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 12 Jan 2022 9:13 PM GMT (Updated: 12 Jan 2022 9:13 PM GMT)

பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், புதுமை பொங்க, இனிமை தங்க, செல்வம் பெருக, வளமை வளர, அனைவருக்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். போகிப் பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும்.

நலமும், வளமும் பெருகட்டும்

பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப்பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் விவசாயிகள் தெய்வ பண்புள்ளவர்கள் ஆவார்கள். இத்தகைய விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட ஜெயலலிதாவும், அதனைத்தொடர்ந்து அவரது அரசும் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி, சீரிய முறையில் செயல்படுத்தின என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூற விரும்புகிறோம்.

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும். நலமும், வளமும் பெருகட்டும். அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நம் விவசாய மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டுவந்து சேர்க்கட்டும் என்று, எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, எங்களுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

விஜயகாந்த்

இதேபோல தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சசிகலா, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்துரமேஷ் நாடார், தமிழ்நாடு நாடார் சங்க பொதுச்செயலாளர் வி.எல்.சி.ரவி உள்பட பலரும் பொங்கல் பண்டிகையையொட்டி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

Next Story