சென்னை ஐ.ஐ.டி.யில் 58 பேருக்கு கொரோனா தொற்று


சென்னை ஐ.ஐ.டி.யில் 58 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 12 Jan 2022 9:16 PM GMT (Updated: 12 Jan 2022 9:16 PM GMT)

சென்னை ஐ.ஐ.டி.யில் 17 மாணவர்கள் உள்பட 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கல்வி நிறுவனம் விதித்து இருக்கிறது.

சென்னை,

தமிழகத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் பரவலாக இருந்து வருகிறது. அதிலும் சென்னையில் தினந்தோறும் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் என கொத்து, கொத்தாக நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

உதாரணமாக சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் ஏராளமான மாணவர்களுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, அங்குள்ள விடுதி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திலும் மாணவர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. கொரோனா காரணமாக ஐ.ஐ.டி.யில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், ஆராய்ச்சி படிப்பு உள்பட சிலவற்றுக்காக மாணவர்கள் வளாகத்தில் தங்கி படித்து வருகின்றனர். அந்தவகையில் 17 மாணவர்களும், 41 ஊழியர்களும் என மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் கடந்த 5-ந்தேதி முதல் 9-ந்தேதிக்குள்ளான இடைபட்ட காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்

தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாணவர்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர ஐ.ஐ.டி. வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘விடுமுறை முடிந்து கல்வி நிறுவனத்தின் வளாகத்துக்கு திரும்பும் பணியாளர்கள், மாணவர்கள் தலைமை மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் அளிக்கும் பரிந்துரையின்படி தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைகள், ஆய்வகங்களை அணுகுவதற்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்யும் சான்றிதழ் அவசியம் என்று கூறுவதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா தொற்றின் முந்தைய பாதிப்பின்போது இதே போல் சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள், பணியாளர்கள் கொத்து, கொத்தாக பாதிக்கப்பட்டனர். அப்போது சுமார் 180-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பணியாளர்களுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் அதேபோல், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளாகத்தில் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சியும், சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

Next Story