கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஆய்வு


கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஆய்வு
x
தினத்தந்தி 12 Jan 2022 10:09 PM GMT (Updated: 12 Jan 2022 10:09 PM GMT)

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா சென்னையில் நேற்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள விசேஷ வார்டுகளையும் அவர் பார்வையிட்டார்.

சென்னை,

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதற்காக தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று சென்னை வந்தார்.

அவரை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஆய்வு

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.

அப்போது 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகள், அந்த அழைப்புகளுக்கு கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பதில் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்கும் விதம், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கும், நோயாளிகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மேற்கொள்ளும் முதல் உதவி ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

இதன்பின்பு அங்கிருந்த 108 ஆம்புலன்சையும், அவற்றில் உள்ள வசதிகளையும் பார்வையிட்டார்.

கொரோனா கட்டுப்பாட்டு மையம்

இதைத்தொடர்ந்து அங்குள்ள ஆக்சிஜன் மையத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர், அங்கு செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு மையம், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆகியவற்றையும் பார்த்தார்.

இதன்பின்பு ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள வார்டை மத்திய மந்திரி ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் ஜெயந்தியிடம் கேட்டறிந்தார்.

அவசர சிகிச்சை பிரிவு

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவு, கொரோனா தடுப்பூசி மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story