கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 13 Jan 2022 5:22 AM GMT (Updated: 13 Jan 2022 5:22 AM GMT)

தமிழ்நாட்டில் 61 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுடன் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார். 

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான மருத்துவ இடங்கள் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்படும். 4 நாட்களில் அதற்கான ஆணை வெளிவரும். 

இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் பணம் சேர்த்து ஆனந்தம் அறக்கட்டளையுடன் இணைந்து 25 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விக்கு உதவியாக ஆன்டிரோய்டு கைப்பேசி வழங்கி உள்ளனர்.

தமிழகத்தில் போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் 61 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது . கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மூன்று விதமாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அச்சப்படாமல் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகத்தில் 75 % சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 60,051 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 


Next Story