கொரோனா கட்டுப்பாடுகளை விஞ்ஞான பூர்வமாக அணுகி வருகிறோம்


கொரோனா கட்டுப்பாடுகளை  விஞ்ஞான பூர்வமாக அணுகி வருகிறோம்
x
தினத்தந்தி 13 Jan 2022 6:14 PM GMT (Updated: 13 Jan 2022 6:14 PM GMT)

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி   கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழா
புதுச்சேரி கவர்னர் மாளிகையில்  பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு கவர்னர்  தமிழிசை சவுந்தர ராஜன் தலைமை தாங்கி பாரம்பரிய முறைப்படி புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டார்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய் சரவணன் குமார், சந்திரபிரியங்கா, செல்வகணபதி எம்.பி., எதிர்க்கட்சி தலைவர் சிவா, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பாஸ்கரன், செந்தில்குமார், கே.எஸ்.பி. ரமேஷ், சம்பத், லட்சுமிகாந்தன், கல்யாணசுந்தரம், சிவசங்கர், வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து       கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விஞ்ஞானபூர்வமாக...
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரியில்  இந்த பொங்கல் கொண்டாடுவது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. 
புதுச்சேரியைப் பொறுத்தமட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை விஞ்ஞானபூர்வமாக அணுகி வருகிறோம். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொங்கல் திருவிழா மக்கள் உணர்வோடும், பண்பாட்டோடும் கலந்தது. புதுச்சேரி அரசு மக்களின் உணர்வுகளோடு இணைந்து பணியாற்றுகிறது.
காணும் பொங்கல் அன்று அனைவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மக்கள் சூழலை உணர்ந்து பொங்கல் பண்டிகையை   பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும். மக்கள் நெருக்கத்திலும் மூடிய அறைகளிலும் தான் கொரோனா பரவுவதாக சொல்கிறார்கள். வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவர்கள் முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சிறுவர்களுக்கான தடுப்பூசி
கொரோனா முழுவதுமாக நம்மை விட்டு போகாது அதோடு வாழப் பழகிக் கொள்ளவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.
தற்போது 15 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. புதுவையில் இன்னும் 2 நாட்களில் அவர்களுக்கான தடுப்பூசி முழுமையாக போட்டு முடிக்கப்படும். முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதில் விரைவில் 100 சதவீதம் எட்டப்படும். அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேற்று (நேற்று) சந்தித்து பேசினேன். அப்போது அவர் கொரோனாவைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசியை வேகப்படுத்தவும் புதுச்சேரி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் சில ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story