இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டையில் நடந்தது: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 44 பேர் காயம்


இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டையில் நடந்தது: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 44 பேர் காயம்
x
தினத்தந்தி 13 Jan 2022 8:02 PM GMT (Updated: 13 Jan 2022 8:02 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை,

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு 4 குழுக்களாக பிரிந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொது மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.

இதில் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 580 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

44 பேர் காயம்

காளைகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர். அவர் களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 5 ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு விழாக்குழுவினரால் தங்க நாணயங்கள், கட்டில், மிக்சி, கிரைண்டர் சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன.

Next Story