பொங்கல் தொகுப்பை குறைகூறியவர் மீதான பொய்வழக்கால் மகன் தற்கொலை: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


பொங்கல் தொகுப்பை குறைகூறியவர் மீதான பொய்வழக்கால் மகன் தற்கொலை: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x
தினத்தந்தி 13 Jan 2022 9:48 PM GMT (Updated: 13 Jan 2022 9:48 PM GMT)

பொங்கல் தொகுப்பை குறைகூறியவர் மீதான பொய்வழக்கால் அவரது மகன் தற்கொலை செய்து கொண்டதை யொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரேஷன் கடையில் நந்தன் என்பவருக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பில் உள்ள புளியில் பல்லி இறந்து கிடந்தது. இதை அவர் எடுத்துக்கூறியதின் மூலம் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. நந்தன் அ.தி.மு.க. நிர்வாகி என்பதை மீறி அவர் இந்த நாட்டின் குடிமகன். அந்த உரிமையில் தான் பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டினார். ஆனால், இவர் மீது ஜாமீனில் வர இயலாத அளவுக்கு ஒரு வழக்கை திருத்தணி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

உண்மையை சொன்ன தனது தந்தை மீது ஜாமீனில் வர இயலாத வழக்குகளை தி.மு.க. அரசு பதவு செய்துள்ளதே என்கிற மன உளைச்சலில், விசாரணை என்ற பெயரில் குடும்பத்தினரை அழைத்து துன்புறுத்துவார்களோ என்ற அச்சத்தில் நந்தனின் மகன் பாபு என்கிற குப்புசாமி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இது தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

குப்புசாமிக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். குப்புசாமியின் உயிரிழப்புக்கு ஆளும் தி.மு.க. அரசே காரணம். மக்கள் பயப்படும்படியாக ஆட்சி நடத்தும் இந்த அரசு வீழும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மற்றொரு அறிக்கை

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், எந்தெந்த தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்களோ, அந்தந்த தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அருகில் உள்ள வீடுகளின் வாசல்களில் பிளீச்சிங் பவுடர் போடுவதும், தண்ணீர் தேங்கிய இடங்களில் கிருமிநாசினி தெளிப்பதும், கபசுர குடிநீர் அளிப்பதும், மாத்திரைகள் வழங்குவதும் நடைமுறையில் இருந்து வந்தது. இதுமட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. பஸ்களும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன.

ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டேயிருக்கின்ற சூழ்நிலையில், கிருமிநாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற பணிகள் எங்கும் நடைபெறவில்லை என்ற புகார்கள் மக்களிடமிருந்து வந்த வண்ணம் உள்ளன.

துரிதப்படுத்த வேண்டும்

இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்ற தருணத்தில் அரசு விழிப்புடன் இருந்து கிருமிநாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா? என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி, கொரோனாவின் பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு அதன் முடிவுகளை விரைந்து வழங்கவும், தேவைப்படுவோருக்கு சான்றிதழ் வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story