மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு துணை நிற்கும் மோடியிடம், மு.க.ஸ்டாலின் உறுதி


மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு துணை நிற்கும் மோடியிடம், மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 13 Jan 2022 11:46 PM GMT (Updated: 13 Jan 2022 11:46 PM GMT)

கொரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்துமுயற்சிகளுக்கும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ேபசினார். அவர் பேசியதாவது:-

பூஸ்டருக்கு வரவேற்பு

கொரோனா தொற்று நோயின் ஒமைக்ரான் அலையை நிர்வகிக்க தமிழ்நாடு முழுமையாக தயார் நிலையில் உள்ளது. எனது அரசு பொறுப்பேற்ற பிறகு, தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்துள்ளோம்.

அந்த வகையில் இன்று வரை, தகுதியுள்ளவர்களில் 64 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 74 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது.

ஆர்.டி.பி.சி.ஆர். மட்டுமே...

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தேவையான அனைத்து நகரங்களிலும் கொரோனா பராமரிப்பு மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட சோதனை விதிமுறைகளை தமிழ்நாட்டில் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அதன்படி, ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் உற்பத்தி திறன், ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளையும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளோம்.

துணை நிற்போம்

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளையும் நான் அறிவுறுத்தியுள்ளேன். இந்த நிலைமையை சமாளிக்க அனைத்துத் அரசு எந்திரமும் முழுமையாக தயார் நிலையில் உள்ளது.

இந்த கொரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story