பொதுஇடங்களில் முறையாக முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் தமிழக அரசு அறிவிப்பு


பொதுஇடங்களில் முறையாக முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2022 12:31 AM GMT (Updated: 14 Jan 2022 12:31 AM GMT)

பொது இடங்களில் முறையாக முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 600 அளவுக்கு குறைந்திருந்தது. இதைத்தொடர்ந்து மக்களும் முக கவசம் அணிவதை குறைத்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் 60 சதவீதம் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணியவில்லை. முக கவசம் அணிபவர்களில் 80 சதவீதம் பேர் மூக்கை மட்டும் விட்டுவிட்டு வாயை அடைக்கும் வகையில் அதை அணிந்து வருகின்றனர்.

தற்போது தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பும் உயர தொடங்கியது. தமிழகத்தை இப்போது தினசரி தொற்றின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

எனவே முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அரசு கருதுகிறது. இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ரூ.500 அபராதம்

இந்த நிலையில் முக கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கும் தொகையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி முக கவசம் அணியாதவர்களிடம் தற்போது வசூலிக்கும் தொகை ரூ.200-ஐ 500 ரூபாயாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதுகுறித்த அரசாணையை சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

அதில், மூக்கையும் வாயையும் சேர்த்து மூடும் வகையில் முக கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்படும் அபராத தொகை ரூ.200 என்பதை ரூ.500 ஆக உயர்த்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கான விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அரசாணை, 12-ந்தேதியிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 12-ந்தேதியில் இருந்தே, அதிகரிக்கப்பட்ட அபராத தொகை வசூலிப்பு அமலுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே ரெயில் நிலையங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தீவிரமாகும் கண்காணிப்பு

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள், சுகாதார துறை மற்றும் காவல்துறை சார்பில் இனிவரும் நாட்களில் இதுதொடர்பான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அபராதம் வசூலிக்கும் நடைமுறையிலும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

அதிக நோய் தொற்று கண்டறியப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு, அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரூ.105 கோடி அபராதம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து, விதிகளை மீறுவோரிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை அவ்வப்போது அரசு உயர்த்தி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய 50 லட்சம் பேரிடம் ரூ.105 கோடி அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story