அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் 80 பேர் காயம், வாலிபர் பலி


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:  காளை முட்டியதில் 80 பேர் காயம், வாலிபர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2022 7:31 PM GMT (Updated: 14 Jan 2022 9:30 PM GMT)

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டியதில் 80 பேர் காயமடைந்தனர்.

மதுரை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.

இந்த போட்டியை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் முன்னிலையில், வணிகவரி துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் காலை 7.30 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் கட்டுப்பாடுகளின்படி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவர் ராஜா தலைமையில் மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்து பங்கேற்க செய்தனர்.

இதேபோல காளைகளை கால்நடைத்துறை இணை இயக்குனர் நட்ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து தகுதியுள்ள காளைகளை போட்டிக்கு அனுப்பினார்.

ஜல்லிக்கட்டு போட்டி 7 சுற்றுகளாக நடைபெற்றது.  ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளுக்கு தங்கக்காசு, கட்டில் பீரோ பசுங்கன்று, சைக்கிள், ஏர்கூலர், ரெஃப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த போட்டியில் 48 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.  இந்நிலையில், சுகாதார அதிகாரி வெளியிட்டுள்ள செய்தியில், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 39 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 24 பேர் மற்றும் பார்வையாளர்கள் 17 பேர் என மொத்தம் 80 பேர் காயமடைந்தனர்.  போட்டியை காண வந்தவர்களில் ஒருவரான 18 வயது வாலிபர் காளை முட்டியதில் பலியாகி உள்ளார் என தெரிவித்து உள்ளார்.


Next Story