மாநில செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள் ; பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு + "||" + 181st birthday of Pennyquick, who built the Mullaiperiyaru Dam; People worship with Pongal

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள் ; பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள் ; பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.
தேனி,

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் தனது பெரும் முயற்சியால் கட்டினார். 

பென்னிகுவிக் லண்டனில் உள்ள தனது சொத்துக்களை விற்று தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கவும், வறண்டு கிடந்த நிலங்கள் வளம் பெறவும் இந்த அணையை கட்டினார். இதனால், 'முல்லைப்பெரியாறு அணையின் தந்தை' என பென்னிகுவிக் அழைக்கப்படுகிறார்.

தேனி மாவட்ட மக்கள் சாதி, மதம் கடந்து பென்னிகுவிக்கை கடவுள்போல் வணங்கி வருகின்றனர். பென்னிகுவிக் பிறந்தநாளான ஜனவரி 15-ந்தேதி தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் 'பென்னிகுவிக்' பொங்கல் என்ற பெயரில் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுவார்கள். மேலும் பென்னிகுவிக் பிறந்தநாளை அரசு விழாவாகவும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள் இன்று தேனி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் குவிந்து வருகின்றனர்.

அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன் ஆகியோர் இன்று காலையில் பென்னிகுவிக் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செய்தனர். 

இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்களை தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தேனி பாலார்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் நினைவு கலையரங்கம் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். தேனி பென்னிகுவிக் நகர், கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் உள்பட பல இடங்களிலும் பென்னிகுவிக் பிறந்தநாளை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.