காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பணிச்சுமை காரணமாக போலீஸ்காரர் தற்கொலை சமூகவலைதளத்தில் பரவும் பரபரப்பு ஆடியோ


காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பணிச்சுமை காரணமாக போலீஸ்காரர் தற்கொலை சமூகவலைதளத்தில் பரவும் பரபரப்பு ஆடியோ
x
தினத்தந்தி 15 Jan 2022 2:39 PM GMT (Updated: 15 Jan 2022 2:39 PM GMT)

புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளி வளாக மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் பரவிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரி  காவலர் பயிற்சி பள்ளி வளாக மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் பரவிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் தேர்வு பணி

புதுச்சேரி கோரிமேடு பூத்துறை சாலை அரிநமோ நகரை சேர்ந்தவர் அரிதாஷ். இவரது மகன் மகேஷ்குமார் (வயது 35). காவலர் பயிற்சி பள்ளியில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். 
இவருக்கு சுதா (25) என்ற மனைவியும், ஹரி (7) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மன அழுத்ததில் இருந்து வந்த நிலையில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மகேஷ்குமார் சிகிச்சை பெற்றார். 
வருகிற 19-ந் தேதி காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு தொடங்க உள்ள நிலையில் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அதற்கான ஏற்பாடுகளில் மகேஷ்குமார் ஈடுபட்டு வந்தார்.

2-வது மாடியில் இருந்து குதித்தார்

இந்தநிலையில் நேற்று  பொங்கல் பண்டிகையன்று கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு மகேஷ்குமார் பணிக்கு வந்தார். சிறிது நேரத்தில் பயிற்சி பள்ளியின் மாடிக்குச் சென்ற அவர், கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்ததில்  மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்துபோனார். இதைக் கண்டு அங்கிருந்த மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், சுபம்கோஷ், செல்வம், தீபிகா மற்றும் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர். அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மகேஷ்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பரபரப்பு ஆடியோ

இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினர். பணி சுமை காரணமாக  மாடியில் இருந்து குதித்து மகேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 
இந்தநிலையில், சமூக வலைதளத்தில் ஒரு ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. அதில், மகேஷ்குமாருக்கு பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தன்னை விடுவிக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்து அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மகேஷ்குமார் இந்த விபரீத முடிவை எடுத்தார் என பேசி பரவலான ஆடியோ காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story