தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை சிறப்பு கோர்ட்டுகளில் இருந்து மாவட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றியது துரதிஷ்டவசமானது: சுப்ரீம்கோர்ட்டு


தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை சிறப்பு கோர்ட்டுகளில் இருந்து மாவட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றியது துரதிஷ்டவசமானது: சுப்ரீம்கோர்ட்டு
x
தினத்தந்தி 15 Jan 2022 4:20 PM GMT (Updated: 15 Jan 2022 4:20 PM GMT)

தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை சிறப்பு கோர்ட்டுகளில் இருந்து மாவட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றியது துரதிஷ்டவசமானது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

நிலஅபகரிப்பு சிறப்பு கோர்ட்டு

கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், நிலஅபகரிப்பு புகார்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுகளை ஏற்படுத்தினார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நிலஅபகரிப்பு சிறப்பு கோர்ட்டு அமைத்தது செல்லாது என்று தீர்ப்பு கூறியது.

ஐகோர்ட்டு தீர்ப்பை அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பெண் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

துரதிஷ்டம்

இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு கடந்த 12-ந்தேதி விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பான உத்தரவு வெளியாகியுள்ளது.

அந்த உத்தரவில் நில அபகரிப்பு புகார்கள் சிறப்பு கோர்ட்டுகளில் இருந்து மாவட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றப்பட்டிருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்த பிறகு நில அபகரிப்பு புகார்களை சிறப்பு கோர்ட்டுகளில் இருந்து மாவட்ட கோர்ட்டுகளுக்கு ஐகோர்ட்டு மாற்றியது தவறு என்றும் சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக்காட்டியுள்ளது

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில், நில அபகரிப்பு புகார்கள் சிறப்பு கோர்ட்டுகளுக்கு மாற்றப்பட்டது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ள சுப்ரீம் கோர்ட்டு், நில அபகரிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிறப்பு கோர்ட்டுகளுக்கு மாற்றப்பட்டனவா, இல்லையா, சிறப்பு கோர்ட்டுகளில் பணி நியமனங்கள் (நீதிபதிகள், அரசு வக்கீல்கள்) செய்யப்பட்டனவா, இல்லையா என்பது குறித்து விரிவான அறிக்கையை சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐகோர்ட்டு தலைமை பதிவாளர்

மேலும் ஜனவரி 24-ந் தேதி நடைபெறும் விசாரணையின்போது, சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் காணொலி விசாரணையில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு புகார்கள் குறித்த விவரத்தையும் பிரமாண பத்திரமாக சென்னை ஐகோர்ட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story