தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநாட்டுவோம்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி


தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநாட்டுவோம்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 15 Jan 2022 8:14 PM GMT (Updated: 15 Jan 2022 8:14 PM GMT)

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், ‘தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநாட்டுவோம்’ என ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொடைவள்ளல் எம்.ஜி.ஆர்.

வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார், போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலர் இருப்பார். அந்த வரிசையில் முதல்வர், நம் உள்ளமெல்லாம் நிறைந்த எம்.ஜி.ஆர். எழை குடும்பத்தில் பிறந்து, அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்து, அன்பு கொண்ட மகனாக குடும்பத்துக்காக உழைத்து, ‘‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்’’ என்ற உணர்வுடன் பாலிலும் வெண்மை, பனியிலும் வெண்மை என்று கூறத்தக்க அளவுக்கு வெள்ளை உள்ளம் கொண்டு வாழ்ந்த, உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

தனக்கென அவர் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. தன் திறமையாலும், உழைப்பாலும் பாடுபட்டு ஈட்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பெரும் செல்வத்தை ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், உயில் எழுதி வைத்துவிட்டு மறைந்த எம்.ஜி.ஆருக்கு நிகரான கொடை வள்ளல் யாரும் உண்டோ?

அயராத உழைப்பு, அசைவிலா ஊக்கம்

எம்.ஜி.ஆர். மழை போலும், மலர் போலும் பிறர்க்கென வாழ்ந்தவர். ‘தன்னை தலையாக செய்வானும் தான்’ என்ற புறநானூற்று வரிகளுக்கு இலக்கணமாய், இலக்கியமாய் கலைத்துறையில் தன் அயராத உழைப்பாலும், அசைவிலா ஊக்கத்தாலும், உழைப்பே உயர்வு தரும் என்ற கொள்கையாலும் நேற்றும், இன்றும், நாளையும் யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத உயரத்திற்கு சென்று சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரும், அண்ணாவும் தமிழ் இன எழுச்சியில் அக்கறை கொண்ட சான்றோரும் உருவாக்கிய இயக்கத்தை அழிக்க, ஊழலும், சுயநலமும், தீய சக்திகளும் அண்ணாவின் ஆட்சியை தங்கள் கோரப்பிடிக்குள் வைத்து நடத்திய அராஜகத்தை எதிர்த்து துணிவுடன் போராடியவர் எம்.ஜி.ஆர். நம் உயிரினும் மேலான அ.தி.மு.க.வை தோற்றுவித்து, வளர்த்து ஆட்சியையும், அதிகாரத்தையும் சாமானிய மக்களின் கைகளுக்கு கொண்டுசென்ற ஏழைகளின் தோழன்.

போர்பரணி பாடவேண்டிய நேரம்

பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், பலநூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் எடுத்துக்காட்டான திட்டங்களை நிறைவேற்றி கருணை தீபமாய் ஒளிரும் ஆட்சி முறையை தமிழ்நாட்டுக்கு வழங்கியவர் நம் வள்ளல் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் தலைமை சீடராக, அவரையே தனது மாதா, பிதா, குரு தெய்வமாகக் கொண்டு வாழ்ந்த ஜெயலலிதாவிடம் 30 ஆண்டுகள் பயிற்சி பெற்ற நாம் எம்.ஜி.ஆர். வகுத்துத்தந்த பாதையில், ஜெயலலிதாவின் வீரம்-விவேகத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது.

மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, மனம்போனபடி பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, கார்ப்பரேட் விளம்பர தேர்தல் பிரசாரம் செய்து, உள்ளத்தில் பொய்யும், உதட்டில் புன்னகையுமாய் மக்களிடம் உறவாடி ஒரு சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க. அரசின் திறமையற்ற, ஊழல் மிகுந்த, மக்களை வஞ்சிக்கின்ற, சுயநலம் மிக்க ஒரு குடும்ப ஆட்சியின் அலங்கோலங்களை தமிழ்நாட்டில் அடியோடு வேரறுக்க நாம் அனைவரும் போர்பரணி பாடவேண்டிய நேரம் இது.

பொற்கால ஆட்சியை விரைவில் நிலைநாட்டிட...

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோர் நடத்தியது போன்ற பொற்கால ஆட்சியை விரைவில் நிலைநாட்டிட நாம் சூளுரைக்க வேண்டிய நாள்தான் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் (நாளை) என்பதே கட்சியினரோடு இந்நாளில் நாங்கள் கூறும் செய்தியும், வேண்டுகோளும். தமிழகம் காக்க தன்னல ஆட்சியை அகற்றுவோம். கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும். கொள்கை வீர தீபங்களை ஏற்றிடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story