தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு


தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு
x
தினத்தந்தி 15 Jan 2022 10:50 PM GMT (Updated: 2022-01-16T07:01:55+05:30)

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், ‘ஒமைக்ரான்’ சமூக பரவல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. எனவே இன்றைய தினம் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி-நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. ‘டாஸ்மாக்’ மதுபான கடைக்கும் விடுமுறை ஆகும். பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகள் முற்றிலும் இயங்காது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரெயில்கள் மட்டும் ஓடும். ஓட்டல்களில் பார்சல் சேவை செயல்படும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி உண்டு. ஆனால் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கையில் வைத்திருக்க வேண்டும்.

யாருக்கு அனுமதி?

ரெயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்லலாம். போலீசார் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிப்பது அவசியம் ஆகும். பயணிகளை இறக்கிவிட்டு திரும்பும்போது அவர்களிடம் டிக்கெட் நகலை பெற்று வைத்திருக்க வேண்டும். டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

முழு ஊரடங்கில் பால், பத்திரிகை வினியோகம், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவம், மருந்தகங்கள், இறுதிச்சடங்கு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி உண்டு. பத்திரிகை-ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போலீசாரின் வாகன சோதனையின்போது அடையாள அட்டையை காண்பித்து தங்கு தடையின்றி செல்லலாம்.

முழு ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். சென்னையில் 312 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொள்ள இருக்கின்றனர். முக்கிய மேம்பாலங்கள் தவிர்த்து அனைத்து மேம்பாலங்களும் அடைக்கப்படும், போக்குவரத்து சிக்னல்களும் நிறுத்தப்படும்.

போலீசார் எச்சரிக்கை

எனவே முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். எனவே தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் சார்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள், தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களை எந்த காரணத்தை கொண்டும் தடுக்க கூடாது. வாகன சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஏற்கனவே அறிவுரை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story