மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்: ராஜேந்திரபாலாஜி மீது புகார் கூறிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி கைது


மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்: ராஜேந்திரபாலாஜி மீது புகார் கூறிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி கைது
x
தினத்தந்தி 16 Jan 2022 7:26 PM GMT (Updated: 2022-01-17T00:56:52+05:30)

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் கூறிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் விஜய நல்லதம்பி, சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் அவரது சகோதரி மகனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், விஜய நல்லதம்பி மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே ராஜேந்திர பாலாஜி மேலும் பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.1½ கோடி மோசடி செய்து விட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மேற்கண்ட விஜய நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரிலும் ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், முத்துப்பாண்டி, பாபுராஜ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேல்முறையீடு

இந்தநிலையில் ரவீந்திரன் அளித்த புகாரில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள மோசடி வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி விஜய நல்லதம்பி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அவர் தனக்கு முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஆனால் இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதையடுத்து விஜய நல்லதம்பி தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விஜயநல்லதம்பியின் செல்போன் தொடர்புகளை கண்காணித்து வந்த போலீசாருக்கு அவர் கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது.

கைது

அதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் அந்த கிராமத்தை முற்றுகையிட்டு விஜயநல்லதம்பி தங்கியிருந்த இடத்தை கண்டறிந்து அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். நேற்று காலை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த மாதம் நவம்பர் 15-ந் தேதி விஜய நல்லதம்பி மீது வழக்குப்பதிவு செய்த பின்பு மேலும் பலர் அவர் மூலம் ராஜேந்திர பாலாஜியிடம் அரசு வேலைக்காக பணம் கொடுத்திருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story