புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது ஜல்லிக்கட்டு: ஆலங்குடி வன்னியன் விடுதியில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்; 66 பேர் காயம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது ஜல்லிக்கட்டு: ஆலங்குடி வன்னியன் விடுதியில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்; 66 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Jan 2022 5:47 PM GMT (Updated: 17 Jan 2022 5:47 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது ஜல்லிக்கட்டு ஆலங்குடி வன்னியன் விடுதியில் நடந்தது. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் 66 பேர் காயமடைந்தனர்.

ஆலங்குடி:
ஜல்லிக்கட்டு
தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்தாலும் ஜல்லிக்கட்டிற்கு அரசு கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டின் (2022) முதல் ஜல்லிக்கட்டு கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் கடந்த 13-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 2-வதாக ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பொதுவாக பொங்கல் பண்டிகையையொட்டி வன்னியன்விடுதி கிராமத்தில் மாயன் பெருமாள் கோவில் அருகே திடலில் ஜல்லிக்கட்டு நடைபெறும். 
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு என்பதால் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டமான தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் வருகை தந்திருந்தனர். இதேபோல காளைகளையும் அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழில் ‘நெகடிவ்' என இருந்த மாடுபிடி வீரர்கள், காளையின் உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 665 காளைகள், 250 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 
இதனை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பால தண்டாயுதபாணி, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சீறிப்பாய்ந்த காளைகள்
அதன்பின் முதல் மாடாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு காளை வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 4 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்து வந்தன. அதனை மாடு பிடி வீரர்கள் பாய்ந்து அடக்க முயன்றனர். ஒரு சில காளைகள் துள்ளிக்குதித்து ஓடி வந்தது. இதனை கண்ட வீரர்கள் சற்றே ஒதுங்கினர். 
அதேநேரத்தில் சிலர் வீரத்துடன் பிடிக்க முயன்றனர். காளையின் திமிலை இறுகப்பிடித்து பரிசுகளை தட்டிச்சென்றனர். காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்கநாணயம், வெள்ளி நாணயம், ரொக்கப்பரிசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஆக்ரோஷமாக விளையாடிய காளைகள்
காளை வாடிவாசலில் இருந்து வெளியே வரும் போது ஒலிப்பெருக்கியில் வர்ணனை செய்யப்பட்டன. அப்போது காளையின் ஊர், உரிமையாளர் பெயர் விவரம் தெரிவிக்கப்பட்டதோடு, மாட்டின் தன்மை பற்றி எடுத்துரைத்தனர். இதில் வாடிவாசலில் இருந்து காளை வெளியே வரும் போது மாடு சுத்து மாடுய்யா... பார்த்து பிடியுங்கள்...எனக் கூறினர். இதனை கேட்ட மாடுபிடி வீரர்கள் அந்த காளைகள் வரும் போது சற்றே ஒதுங்கி தடுப்பில் ஏறி நின்றனர். அதற்கேற்ப காளைகளும் களத்தில் நின்று ஆக்ரோஷமாக விளையாட்டு காட்டின. 
மீறி பிடிக்க வந்தவர்களை கொம்புகளால் தூக்கி வீசி துவம்சம் செய்தது. மாடுபிடி வீரர்கள் தன்னம்பிக்கையுடன் காளைகளை போட்டிப்போட்டு பிடித்ததை பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ஜல்லிக்கட்டை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்தனர். ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் மகிழ்ச்சியாய் கண்டுகளித்தனர். அந்த கிராமமே திருவிழா போல இருந்தது.
66 பேர் காயம்
காளைகளை அடக்க முயன்றதில் மாடுபிடி வீரர்கள் மொத்தம் 66 பேர் காயமடைந்தனர். இதில் 16 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 3.30 மணி அளவில் முடிவடைந்தது. ஜல்லிக்கட்டையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி பாதுகாப்பு ஏற்படுத்தினர். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருந்தன. 
ஜல்லிக்கட்டில் 13 காளைகளை பிடித்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டியை சேர்ந்த வாலிபர் ஆனந்திற்கு முதல் பரிசாக தங்க மோதிரமும், நினைவு கோப்பையும், 11 காளைகளை பிடித்த புதுக்கோட்டை மாவட்டம், பள்ளத்துப்பட்டியை சேர்ந்த சுப்ரமணியனுக்கு 2-வது பரிசாக தங்க நாணயமும், 9 காளைகளை பிடித்த சிவாவுக்கு 3-வது பரிசாக வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டது. இதேபோல சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. 
மருத்துவ குழுவினர் திடீரென வெளியேறியதால் பரபரப்பு
ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் தயாராக இருந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் காலையில் அவர்களுக்கு உரிய சாப்பாடு மற்றும் குடிநீர் வசதி இல்லாததால் அனைவரும் திடீரென வெளியேறி சாப்பிட்டு வருவதாக கூறிச்சென்றனர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒலிப்பெருக்கியில் ஜல்லிக்கட்டில் மாடுகளை அவிழ்த்து விடுவதை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். மருத்துவக்குழுவினர் வெளியே செல்வதால் வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சை அளிக்க முடியாது. எனவே ஜல்லிக்கட்டை சிறிது நேரம் நிறுத்த விழாக்குழுவினரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விழாக்குழுவினர் விரைந்து வந்து மருத்துவக்குழுவினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினர். அதன்பின் ஜல்லிக்கட்டில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பானது.

Next Story