சென்னையில் மீண்டும் மழை குளிர்ந்த காற்றுடன் இதமான வானிலை நிலவியது


சென்னையில் மீண்டும் மழை குளிர்ந்த காற்றுடன் இதமான வானிலை நிலவியது
x
தினத்தந்தி 17 Jan 2022 6:54 PM GMT (Updated: 17 Jan 2022 6:54 PM GMT)

சென்னையில் நேற்று மீண்டும் மழை பெய்தது. குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான வானிலை நிலவியது.

சென்னை,

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட மிக அதிகமாக பெய்துள்ளது. கடந்த டிசம்பர் 30-ந்தேதி அன்று மிக கனமழை பெய்தது. அன்று பெய்த ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்க முடியாமல், சென்னை நகரம் வெள்ளக்காடானது. அதன்பின்னர் மழை ஓய்ந்தது. வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது.

இந்த நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ய தொடங்கியது. நேற்று காலைப்பொழுதும் சாரல் மழைப்பொழிவுடன் விடிந்தது. பனித்துளிகள் போல் மழைத்துளிகள் விழுந்தன. காலை 9 மணிக்கு மேல் மழையின் வேகம் அதிகரித்தது. இதனால் நேற்று காலை அலுவலகம் சென்றவர்கள் சிரமம் அடைந்தனர். ரெயின் கோர்ட், குடையை வீட்டில் வைத்துவிட்டு வந்தவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

ரம்மியமான வானிலை

சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், ராயப்பேட்டை, கொடுங்கையூர் உள்பட பல்வேறு இடங்களிலும், மாதவரம், புழல், செங்குன்றம், அம்பத்தூர் போன்ற புறநகர் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரையில் மழை நீடித்தது. அப்போது மழையின் வேகம் திடீரென்று அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது.

அதன்பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது. ரம்மியமான வானிலை நிலவியது. மதியம் 2 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் சரசரவென்று சத்தத்துடன் மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடிக்குமோ? என்று தாழ்வான பகுதிகளில் வசிப்போர்கள், நடைபாதை வியாபாரிகள் அஞ்சிய வேளையில், மழை சட்டென்று அடங்கியது. மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் இதமான காலநிலை காணப்பட்டது. சென்னையில் கனமழை இன்றி மிதமான மழை பெய்ததால் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை. வழக்கம் போல் போக்குவரத்து இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

மழை நீடிக்கும்

இந்தநிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Next Story