உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்


உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தினத்தந்தி 17 Jan 2022 10:01 PM GMT (Updated: 17 Jan 2022 10:01 PM GMT)

உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

கடந்த 8 மாத கால தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளனர். குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும், பொது வெளியில் காவல் துறையினரிடம் மரியாதை குறைவாக நடப்பது மிகவும் அதிகரித்துள்ளது.

அரசியல் அழுத்தம், பொது வெளியில் ஒருசில காவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சுதந்திரமாக செயல்பட முடியாத நிலைமை, உயர் அதிகாரிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விரைவாக முடிவு காணுங்கள் என்று தனக்கு கீழ் உள்ள போலீசாருக்கு அழுத்தம் தருதல் போன்றவற்றால் பாதிக்கப்படும் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தங்களது வெறுப்பை காட்டும் நிலைமை ஏற்படுவதாக உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாற்றுத்திறனாளி மரணம்

8-1-2022 அன்று சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனை, வழக்கு சம்பந்தமாக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும், பிறகு 11-ந்தேதி அவரை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்ததாகவும், 12-ந்தேதி காலை மாற்றுத்திறனாளி பிரபாகரன் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அன்றே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையில் இறந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததுடன், மாற்றுத்திறனாளியின் இறப்புக்கு காரணமான போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் சரக டி.ஐ.ஜி., சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் மூவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 12-ம் தேதி நடைபெற்ற, இந்த மாற்றுத்திறனாளியின் மரணம் பற்றி செய்தி 16-ந்தேதி வரை மக்களை சென்றடையவில்லை.

எல்லை மீறல்

அதேபோல், சென்னையில் முககவசம் அணியாத சட்டக்கல்லூரி மாணவர் மீது அபராதம் விதித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாா், அந்த மாணவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று தாக்கியதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளின் எல்லை மீறல்தான் போலீஸ் நிலைய இறப்புகளாக மாறிவிடும் சூழ்நிலையை உருவாக்குகின்றன.

சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் இறப்புக்கு, தொடர்புடைய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சத்தை அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், இந்த அரசின் தவறினால், தனது இன்னுயிரை இழந்த திருத்தணி குப்புசாமியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சத்தை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

கண்டனம்

மேலும், நான் ஏற்கனவே கூறியபடி, காவல் துறையில் நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சரியான பணியிடங்களை வழங்குங்கள், சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்துங்கள், தவறு செய்யும் போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் இந்த அரசை கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story