அரசு பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நிறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


அரசு பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நிறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 17 Jan 2022 11:22 PM GMT (Updated: 17 Jan 2022 11:22 PM GMT)

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஒரு வாரகாலமாக தினந்தோறும் 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டிருந்த கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை, நேற்று வெறும் 9 என்ற அளவிலேயே உயர்ந்துள்ளது. இதுவரை வந்துள்ள தகவல் அடிப்படையில் நேற்றைக்கு உள்ள நிலைமையை காட்டிலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

என்றாலும் கூட பொங்கல் விடுமுறையை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கூடுதலாக தொற்று பாதித்தோர் எண்ணிக்கை இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தினந்தோறும் 1½ லட்சத்துக்கும் குறையாத அளவில் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் அதிகமான அளவில் பரிசோதனைகள் தமிழகத்தில் தான் நடந்து கொண்டிருக்கின்றன.

தேவையான அளவில் கையிருப்பு

தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் கூட, அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுதல் என்பது குறைவாகவே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் வசதிக்காக அரசு ஆஸ்பத்திரிகள், கண்காணிப்பு மையம் என 1 லட்சத்து 91 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இருந்தாலும் தற்போது வரை 9 ஆயிரம் படுக்கைகளே நிரம்பியுள்ளன. எனவே படுக்கைகள் குறித்தோ, ஆக்சிஜன் வசதி குறித்தோ, மருந்து-மாத்திரைகள் குறித்தோ கவலை பட தேவையில்லை. தேவையான அளவில் கையிருப்பு இருக்கிறது.

சரியான மருத்துவ கட்டமைப்பு என்பது தமிழகத்தில் தயார் நிலையில் இருக்கிறது. முக கவசம் அணிவதும், தடுப்பூசி போட்டுக்கொள்வதும் மிக மிக முக்கியம். இதுவரை கணக்கீடுகள் அடிப்படையில் பார்த்தால், தடுப்பூசி போடாதவர்கள் மட்டுமே இத்தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து இருக்கிறார்கள். தடுப்பூசி போட்டவர்கள் மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பி வந்துள்ளனர்.

100 சதவீதம் நிறைவு

எனவே தடுப்பூசி மட்டுமே சரியான தேர்வு. வருகிற சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளை எடுத்துக்கொண்டால் 100 சதவீத மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசிகள் போட்டு முடித்துவிட்டோம். தற்போது ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணி நடந்து வருகிறது. இதிலும் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது ஒரு மிகப்பெரிய நிறைவான செய்தியாகும்.

60 வயதை கடந்தவர்களில் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்று பார்த்தால் சுமார் 90 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு இலக்கு நிர்ணயித்து தான் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை மட்டுமன்றி மற்ற சேவை துறைகளை சார்ந்த அதிகாரிகளும் அல்லும், பகலும் அயராது பாடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை கணக்கிட்டு அவர்களை முகாமுக்கு அழைத்து வந்து தடுப்பூசி போடவைப்பதில் பெரும் சிரமப்பட்டு உழைத்து வருகிறார்கள்.

இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே சரியான தீர்வு என்பதை உணர்ந்து, 60 வயதை கடந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் நல்லது. அவரவர் குடும்ப உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய முறையில் அறிவுறுத்தி அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்யவேண்டும். அதேவேளை கொரோனா காலத்தில் மற்ற நோய்களுக்கான சிகிச்சை தருவதில் சுணக்கம் கூடாது, தாமதம் கூடாது, மக்கள் சிரமப்படக்கூடாது என்று ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலமாக கடந்த 6 மாதங்களில் 45 லட்சத்து 16 ஆயிரத்து 974 பேர் பயனடைந்துள்ளனர். இது உலக வரலாற்றிலேயே பெரிய வெற்றி.

முழு ஊரடங்கு முழுமையான வெற்றி

தமிழகத்தில் முழு ஊரடங்கு முழுமையான வெற்றியை பெற்றுள்ளது. முதல்-அமைச்சர் விடுத்த வேண்டுகோளை, சிரமமாக இருந்தாலும் கூட பொதுமக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். குறிப்பாக நேற்று (நேற்று முன்தினம்) காணும் பொங்கலிலும் கூட, ஊரடங்கை மதித்து அதை மக்கள் வெற்றிபெற செய்துள்ளனர். ஆனால் மெரினா, பட்டினப்பாக்கம் போன்ற பாதுகாப்பு குறைவான பகுதிகளில் மக்கள் சென்றிருக்கிறார்கள். போலீசாரும், மாநகராட்சியும் அவர்களை உடனடியாக வெளியேற்றிவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story