தேசத்தின் சொத்துகளான கனிம வளங்களை சுரண்டுவதை அனுமதிக்கக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு


தேசத்தின் சொத்துகளான கனிம வளங்களை சுரண்டுவதை அனுமதிக்கக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Jan 2022 11:24 PM GMT (Updated: 17 Jan 2022 11:24 PM GMT)

தேசத்தின் சொத்துகளான கனிம வளங்களை சுரண்டுவதை அனுமதிக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருச்சி டால்மியாபுரத்தில் உள்ள டால்மியா லிமிடெட் நிறுவனம், தங்களது நிறுவனத்திற்கு பெரம்பலூர் மாவட்டம் தேரணி கிராமத்தில் இருந்து கனிமங்களை எடுத்து செல்ல வாகன அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘கனிம வளங்களை எடுத்து செல்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் குத்தகை அனுமதி குறித்து பரிசீலிக்க முடியாத நிலையில் மாநில அரசு உள்ளது' என்றார்.

வருவாய் இழப்பு

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பல இடங்களில் உரிய விதிகளை கடைபிடிக்காமல் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வளங்கள் எடுக்கப்படுகிறது. கனிமவள அனுமதி தொடர்பான பல வழக்குகள் இடைக்கால உத்தரவு பெறப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கனிம வளங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. எனவே, கனிமவளம் தொடர்பான வழக்குகளில் பெறப்பட்டுள்ள இடைக்கால உத்தரவுகளை நீக்கக்கோரி மனுதாக்கல் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்த மனுக்களை நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து முடித்து வைக்க வேண்டும். வருவாய் மற்றும் தேச நலன் சார்ந்துள்ள இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

சட்டவிரோதம்

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, கனிம வளத்துறை தொடர்பான பல்வேறு வழக்குகளில் இடைக்கால உத்தரவை பெற்று பல நிறுவனங்கள் நாட்டின் சொத்துகளை அபகரித்து வருகின்றன. இது சட்டவிரோதமாகும்.

தேசத்தின் சொத்துகளை சுரண்டுவதற்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது. கனிம வளங்களை கொள்ளையடிக்கும் சட்டவிரோத செயல்களை மிக கடுமையான முறையில் அணுக வேண்டும்.

இதுபோன்ற வழக்குகளில் வழக்கு ஆவணங்கள் அடங்கிய கட்டுகள் காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாக பல வழக்குகள் பட்டியலிடப்படாமல் உள்ளன. இதுபோன்ற வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

வழக்கு ஆவணங்கள் காணாமல் போகுதல், வழக்கு ஆவணங்களை வேண்டுமென்றே வேறு இடங்களில் மாற்றி வைத்தல் போன்ற செயல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது ஐகோர்ட்டு பதிவாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பெரிய அளவில் வருவாயை ஈட்டித்தரும் கனிம வளத்துறை தொடர்பான நிலுவை வழக்குகளை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு பதிவாளர் கொண்டு செல்ல வேண்டும். அந்த வழக்குகளை விரைந்து முடிக்க தேவைப்பட்டால் சிறப்பு அமர்வு அமைக்கப்படலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story