சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு


சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெரும் முயற்சியால், தமிழ் மொழி 2004-ம் ஆண்டு, அக்டோபர் 12-ந்தேதி மத்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற கருணாநிதியின் கனவினை நிறைவேற்ற, மத்திய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செம்மொழிக்கான நிறுவனமொன்று அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக சென்னையில் அமையப்பெற்றது.

பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டிடம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திரமோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

இந்தநிலையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளை மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அங்குள்ள நூலகத்தைப் பார்வையிட்டு, பழமையான நூல்கள் குறித்தும், செவ்வியல் நூல்களின் மின்படியாக்கம் குறித்தும் ஆவலோடு கேட்டறிந்தார். மேலும், திருவள்ளுவர் அரங்கம் மற்றும் தொல்காப்பியர் அரங்கம், கல்விசார் பணியாளர்கள், நிர்வாகப் பிரிவு அலுவலகங்களைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, செம்மொழி நிறுவன ஆய்வு சார் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது நிறுவன இயக்குனர் காட்சி வழி மூலம் நிறுவனத்தின் செயற்பாடுகளை விளக்கினார். அதில் இந்நிறுவனத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகள், தற்போது செய்து கொண்டிருக்கும் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்காலத் திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்து அறிவுறுத்தினார்.

புதிய நூல்கள்

இந்நிகழ்வில், செம்மொழி நிறுவனத்தின் தொல்காப்பிய ஆய்வு, தெய்வச்சிலையார் உரைநெறி, ஐங்குறுநூறு குறிஞ்சி, ஐங்குறுநூறு பாலை, வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம், புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு உள்ளிட்ட எட்டு புதிய நூல்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், செம்மொழியின் பெருமைகளை வெகுமக்கள் அறியச் செய்ய தக்க ஊடக வழிகள் மற்றும் கருத்தரங்கங்கள் ஆகியவற்றை நடத்த முயற்சி செய்ய வேண்டும். கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு 22-ந்தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று பேசினார்.

இந்த நிகழ்வின்போது, அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குனர் வீ.ப.ஜெயசீலன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, இயக்குனர் ஆர். சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story