எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அறிக்கை விவகாரம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்


எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அறிக்கை விவகாரம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
x
தினத்தந்தி 18 Jan 2022 9:57 PM GMT (Updated: 18 Jan 2022 9:57 PM GMT)

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அறிக்கை விவகாரம் தொடர்பான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் “கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்கள் வாயிலாக தனக்கென்று தனி இடம் பெற்றவர் எம்.ஜி.ஆர்.” என்று குறிப்பிட்டுள்ளதில் என்ன குற்றம் கண்டுபிடித்தார் ஜெயக்குமார். இந்த 2 படங்கள் மூலமே எம்.ஜி.ஆர். கலையுலகில் பிரபலமானார் என்பது ஊரறிந்த உண்மை.

ஆனால், வரலாறு தெரிந்து கொள்ளாத ஜெயக்குமார், இந்த படங்கள் வெளிவருவதற்கு முன்பே என் தங்கை, மர்மயோகி, சர்வாதிகாரி போன்ற வெற்றிப்படங்கள் மூலம் திரையுலகில் எம்.ஜி.ஆர். கோலோச்சினார் என்ற ‘பச்சை பொய்யை’ சொல்கிறார்.

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் குறித்து ஜெயக்குமார் கூறியிருக்கும் செய்திகள் ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டி, திறக்கப்பட்டதும், அதனை திறந்து வைத்ததும் கருணாநிதி என்பதற்கு சான்று அப்பல்கலைக்கழகத்தில் உள்ள திறப்புவிழா கல்வெட்டு.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story