தமிழகத்தில் 600 இடங்களில் வியாழக்கிழமைதோறும் ‘பூஸ்டர்’ தடுப்பூசி சிறப்பு முகாம்


தமிழகத்தில் 600 இடங்களில் வியாழக்கிழமைதோறும் ‘பூஸ்டர்’ தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 18 Jan 2022 11:16 PM GMT (Updated: 2022-01-19T04:46:35+05:30)

தமிழகத்தில் 600 இடங்களில் வியாழக்கிழமைதோறும் ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு வீடுகளுக்கே சென்று ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்தும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறப்பு முகாம்

தமிழகத்தில் இதுவரை 92 ஆயிரத்து 522 பேருக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ‘பூஸ்டர் டோஸ்’ போட சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. சென்னையை பொறுத்தவரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் ஆஸ்பத்திரி உள்ளிட்ட 160 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட 440 இடங்கள் என மொத்தம் 600 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும்.

இந்தியாவில் கொரோனா பரவல் 20 சதவீதத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் தான் 16 முதல் 18 சதவீதம் கொரோனா பரவல் உள்ளது. தமிழகத்தில் குறைவான பாதிப்பு என்கின்ற போதிலும், கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தில் நாள் ஒன்றிற்கு 2 ஆயிரம் உயர்ந்து இருந்தது. நேற்று (நேற்று முன்தினம்) கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 500 அளவுக்கு குறைந்துள்ளது. பொங்கலுக்கு வெளி ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வந்தால் வரக்கூடிய நாட்களில் பாதிப்பு அதிகரிக்குமா என்பது 2 நாட்களில் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story