மாநகராட்சி தேர்தல்: சென்னையில் 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு தமிழக அரசு அறிவிப்பு


மாநகராட்சி தேர்தல்: சென்னையில் 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2022 11:23 PM GMT (Updated: 18 Jan 2022 11:23 PM GMT)

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, வாக்காளர்கள் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வார்டு வரையறை பட்டியலும், இறுதி வாக்களர் பட்டியலையும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.

அந்த வகையில் சென்னையில் 20 லட்சத்து 4 ஆயிரத்து 860 ஆண்கள், 20 லட்சத்து 74 ஆயிரத்து 616 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 1,102 பேர் என மொத்தம் 40 லட்சத்து 80 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர்.

50 சதவீதம் பெண்கள்

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவியும் பெண்களுக்கு (எஸ்.சி.) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 50 சதவீதம் அதாவது 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து முதன்மை செயலாளரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

அதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், பெண்களுக்கு 100 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 84 வார்டு பெண்களில் பொது பிரிவினருக்கும், 16 வார்டுகள் பெண்களில் எஸ்.சி. பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 100 பொது வார்டுகளில், எஸ்.சி. பிரிவினருக்கு 16 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story